
கோத்தா கினபாலு : எதிர்வரும் நவம்பர் 29-ஆம் சபா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறவிருக்கும் நிலையில் அனைத்து 73 சட்டமன்றத் தொகுதிகளிலும் களமிறங்கியுள்ளது ஷாபி அப்டால் தலைவராக இருக்கும் வாரிசான் சபா கட்சி.
கூட்டணி இல்லாமல் தனியொரு கட்சியாக அனைத்து 73 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுவது ஷாபி அப்டால் கட்சி மட்டும்தான்.
தனது கட்சியை மேற்கு மலேசியாவுக்கும் விரிவாக்கம் செய்கிறேன் என கடந்தாண்டில் தீவிரமாக இறங்கி – சில இந்திய, சீனப் பிரமுகர்களைத் தன் கட்சிக்குள் ஈர்த்த ஷாபி அப்டால் – சபா தேர்தல் நெருங்கி வர – அந்தத் திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, தனது சபா மாநிலத்திற்கே திரும்பி விட்டார்.
பல தொகுதிகளில் பல்முனைப் போட்டிகள் நடப்பதால், பிளவுபடும் வாக்குகளாலும் – உள்ளூர் கட்சி என்ற தகுதியாலும் – ஷாபி அப்டாலின் வாரிசான் சபா கட்சி கணிசமானத் தொகுதிகளை வெல்லும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ஆனால் அந்த எண்ணிக்கை ஆட்சி அமைக்கத் தேவையான 37-தொகுதிகளைத் தாண்டுமா என்பது கேள்விக் குறி. அப்படித் தாண்டினால் மீண்டும் ஷாபி அப்டால் முதலமைச்சராகலாம்.
அல்லது சுமார் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே, மற்ற சில சிறிய, உதிரிக் கட்சிகளுடன் இணைந்து சபா மாநில அரசாங்கத்தை ஷாபி அப்டால் அமைக்கும் சாத்தியம் உருவாகலாம்.
எனவே ஷாபி அப்டால் மீண்டும் முதலமைச்சராக சபா அரசியலில் பிரகாசிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





