Home கருத்தாய்வு 50,000 பேர் திரண்ட பெர்மாத்தாங் பாவ் பிரச்சாரக் கூட்டத்துடன் அன்வாரின் 15ஆண்டுகால போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது!

50,000 பேர் திரண்ட பெர்மாத்தாங் பாவ் பிரச்சாரக் கூட்டத்துடன் அன்வாரின் 15ஆண்டுகால போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது!

901
0
SHARE
Ad

Anwar-Lembah-Pantai-Featureபினாங்கு, 5 மே – 1998ஆம் ஆண்டு செப்டம்பரில் அன்வார் இப்ராகிம் துணைப் பிரதமர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டபோது தொடங்கிய அவரது அரசியல் – சமூக மாற்றத்திற்கான போராட்டம் ஏறத்தாழ 15 ஆண்டு காலத்திற்குப் பின்னர் நேற்றிரவு அவர் போட்டியிடும் பெர்மாத்தாங் பாவ் தொகுதியிலுள்ள செபராங் ஜெயா வட்டாரத்தில் சுமார் 50,000 பேர் கலந்து கொண்ட மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றியதோடு ஒரு நிறைவுக்கு வந்துள்ளது.

இனி அவரது அடுத்த கட்ட போராட்டம் நாட்டின் 7வது பிரதமராக பதவியேற்று நாட்டை வழிநடத்துவதா அல்லது மீண்டும் எதிர்க் கட்சித் தலைவராக தனது அரசியல் பயணத்தைத் தொடர்வதா அல்லது அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்வதா என்பது இன்றிரவு தெரிந்து விடும்.

நேற்று இரவு 9 மணியளவில் சுமார் 30,000 பேர் கலந்து கொண்ட லெம்பா பந்தாய் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றி விட்டு உடனே பினாங்கு புறப்பட்டுச் சென்ற அன்வார் இப்ராகிம் அங்கு தான் போட்டியிடும் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் திரண்டிருந்த சுமார் 50 ஆயிரம் பேர் கொண்ட பிரம்மாண்ட கூட்டத்தின் முன்னிலையில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

#TamilSchoolmychoice

(எப்படி அவ்வளவு விரைவாக பினாங்கு சென்றார் என்பதுதான் அனைவர் மனங்களிலும் எழுந்த கேள்வி!)

1982ஆம் ஆண்டு முதல் தவிர்க்க முடியாத சக்தி

1982ஆம் ஆண்டு வரை மாணவர் அரசியலிலும், இளைஞர் அமைப்புக்களிலும், சமூகப் போராட்டங்களிலும் குறிப்பிடத்தக்க தலைவராகத் திகழ்ந்த அன்வார் இப்ராகிம் 1982ஆம் ஆண்டில் அம்னோவில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தைத் தொடக்கினார்.

அப்போது முதல் மலேசிய அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக – சக்தியாக உருவாகத் தொடங்கினார்.

1998ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டபோது அதோடு அவரது அரசியல் சகாப்தம் முடிந்தது என அரசியல் பார்வையாளர்கள் கணித்தனர்.

ஆனால் அதற்குப் பின்னர்தான் இன்றைக்கு நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் அரசியல் மாற்றத்திற்கு  வித்திடும் விதமாக, பார்ட்டி கெஅடிலான் ராயாட் (மக்கள் நீதிக் கட்சி) என்ற பெயரிலான அரசியல் கட்சியை தனது மனைவியைத் தலைவராகக் கொண்டு தொடக்கினார்.

அந்த கட்சி தொடங்கப்பட்டபோது அவர் சிறைக்குள் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறையில் இருந்து 2004ஆம் ஆண்டில், பல போராட்டங்களுக்குப் பின்னர் அவர் வெளியே வந்தபோது தனது முதுகு வலிப் பிரச்சனையால் அவர் உடல் நலம் குன்றியிருந்தார்.

எனவே, இனி அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதும், நாடெங்கும் அலைந்து திரிந்து ஆதரவு தேடுவதும் நடக்காத செயல் என்று அனைவரும் நினைத்திருந்தனர்.

அப்போது, அவர் கலந்து கொள்ளும் கூட்டங்களில் 50 பேர், 100 பேர் என்றே கலந்து கொண்டனர். அவரும் அப்போது அதிகமாக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளராப் பணியாற்றத் தொடங்கினார்.

மீண்டும் அவர் தீவிர அரசியலுக்கு வரமாட்டார் என்றுகூட பலர் ஆரூடம் கூறினர்.

அரசியல் மறுபிரவேசம் – எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தல்

மனம் தளராமல், தனது அரசியல் மறுபிரவேசத்தை தொடக்கிய அவர் அடுத்த நான்கே ஆண்டுகளில் நாட்டின் முக்கிய எதிர்க் கட்சிகளான பாஸ், ஜசெக இரண்டையும் இணைத்து, மக்கள் கூட்டணி – பக்காத்தான் ராயாட் – என்ற கூட்டணியை உருவாக்கி 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பிரமிக்கத்தக்க வெற்றியைப் பெற்றார்.

இதற்கிடையில், எத்தனையோ போராட்டங்கள், வழக்குகள், ஓரினப் புணர்ச்சி புகார்கள், அவரது தகாத உறவுகளின் காணொளிகள் (வீடியோ) என பல போராட்டங்களை – சர்ச்சைகளைச் சந்தித்தார்.

மலேசிய அரசியலில் அவரைப் போன்று அவமானங்களையும், அவமதிப்புக்களையும், இழிவுகளையும், இன்னல்களையும் சந்தித்தவர்கள் இதுவரை யாரும் இல்லை.

எல்லவாற்றையும் கடந்து –

இதோ இன்று 13வது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தையும் முடித்துக் கொண்டு, நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கி விட்டார்.

எல்லா மலேசியர்களையும் – ஏதோ ஒரு பரபரப்பான ‘திரில்லர்’ சினிமாப் படம் என்பார்களே – அதுபோல இன்றைக்கு இரவு என்ன நடக்கும் என படபடக்கும் இதயங்களுடன் தாங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியின் நுனிக்கே, அன்வார் இப்ராகிம் கொண்டு வந்து வைத்து விட்டார்.

இனி அவர் நாட்டின் 7வது பிரதமரா – அல்லது மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரா – அல்லது அவரைப் பிரதமர் ஆக்க விடாமல் அரசியல் சித்து விளையாட்டுகள் – திரைமறைவுப் போராட்டங்கள் நடக்குமா என்பதெல்லாம் இன்றிரவு அல்லது நாளைக்குள் நமக்குள் தெரிந்து விடும்.

ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக அவர் பிரதமராக நாளை வர முடியாவிட்டாலும், அவரது போராட்டத்தில் அவர் வெற்றியடைந்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.

அதுதான் அரசியல் ஆய்வாளர்களின் முடிவும் கூட!

நமது நாட்டில் இன்றைக்கு நடந்திருக்கும் அத்தனை அரசியல் மாற்றங்களும், சீர்திருத்தங்களும் அவரது முயற்சியால், போராட்டத்தால்தான் சாத்தியமாயின என்பதை யாரும் மறுக்கவும் – மறைக்கவும் முடியாது.

அதுதான் அவரது வெற்றி!

அதைக் கொண்டுதான் மலேசியர்கள் அவரை என்றும் தங்கள் நினைவுகளில் வைத்திருப்பர்.

-இரா.முத்தரசன்