Home 13வது பொதுத் தேர்தல் தேர்தல் களம் நேரடிப் பார்வை : கிளானா ஜெயா அரங்கத்தில் மக்கள் கூட்டணியின் இறுதிக் கட்ட...

தேர்தல் களம் நேரடிப் பார்வை : கிளானா ஜெயா அரங்கத்தில் மக்கள் கூட்டணியின் இறுதிக் கட்ட பிரச்சாரம்! 50,000 பேர் திரண்டனர்!

696
0
SHARE
Ad

kelana jaya

கிளானா ஜெயா, மே 5 – சிலாங்கூர் மாநிலம் கிளானா ஜெயாவில் நேற்று இரவு நடந்த மக்கள் கூட்டணியின் இறுதி கட்ட பிரச்சாரக் கூட்டத்தில், சுமார் 50,000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, மகத்தான ஆதரவை நல்கினர்.

கிளானா ஜெயா விளையாட்டரங்கத்தில் இந்த பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

சரியாக 8 மணிக்கு தேசிய கீதம் “நெகாரா கு” பாடலோடு பிரச்சாரக் கூட்டம் தொடங்கியது.

ஆனால் அதற்கு முன்னரே பார்வையாளர்களுக்காக போடப்பட்டிருந்த இருக்கைகள் அனைத்தும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தன. இருப்பினும் 9 மணி வரையிலும் கூட்டத்தில் கலந்து கொள்ள மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

ஆனால் இருக்கைகள் இல்லாததால் நிலைமையைப் புரிந்து கொண்டு ஆங்காங்கே நின்று கொண்டே மேடையில் வேட்பாளர்கள் பேசுவதை ஆர்வமுடன் கேட்டனர்.

இக்கூட்டத்தில் சுபாங், பெட்டாலிங் ஜெயா உத்தாரா, பெட்டாலிங் ஜெயா செலாத்தான், கிளானா ஜெயா, பூச்சோங் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் அதனைச் சேர்ந்த சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

அந்த பகுதி முழுவதும் மக்கள் கூட்டணியின் மூன்று கொடிகளும் பறக்கவிடப்பட்டு, அந்த இடம் முழுவதும் வண்ணமயமாக விழாக் கோலம் பூண்டிருந்தது. இந்தியர்கள், மலாய்க்காரர்கள், சீனர்கள் என எல்லா சமூக மக்களும் அக்கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

அதற்கேற்றாற் போல் மேடையில் உரை நிகழ்த்தியவர்களும் மூன்று மொழிகளிலும் பேசினார். அதிலும் குறிப்பாக சீன உடை அணிந்தவர்கள் தமிழிலும், இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்தவர்கள் சீன மொழியிலும் பேசி வந்திருந்த பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தனர்.

இது தான் மக்கள் கூட்டணியின் சிறப்பு. காரணம் இத்தனை ஆண்டுகாலம் மலாய், சீனர், இந்தியர் என இனவாரியாக சலுகைகளையும், திட்டங்களையும் அமுல்படுத்தி, மலேசிய மக்களை மலேசியர்களாக ஒன்றுபட விடாமல் செய்து வந்தது தேசிய முன்னணி அரசாங்கம்.

அதன் பாரபட்சமான ஆட்சியால் மக்கள் அனைவரும் துவண்டு போயிருந்த வேளையில், இனவாத பேதமின்றி அனைவரும் ஒன்றே என்ற கொள்கையோடு விடிவெள்ளி போல் தோன்றிய மக்கள் கூட்டணியை, மிகவும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டுவிட்டனர் என்பதற்கு சான்று தான் இந்த பெருந்திரளான மக்கள் கூட்டம் என்றே கருதத் தோன்றியது.

பேச்சாளர்கள் அனைவரும் அவர்களது தொகுதிகளிலுள்ள முக்கிய பிரச்சனைகள் குறித்து உரையாற்றியதோடு அதற்கான தீர்வையும் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். அவர்களது ஒவ்வொரு பேச்சுக்கும் பலத்த கரகோஷங்களை எழுப்பிய மக்கள், இடையிடையே வாத்தியக்கருவிகளையும் இசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் ஆர்வத்தை வைத்துப் பார்க்கும் போது, இன்று நடைபெறும் பொதுத்தேர்தலில் அநேக மக்களின் வாக்குகள் மக்கள் கூட்டணியைத் தவிர வேறு கட்சிகளுக்கு திசை திரும்ப வாய்ப்பு இல்லை என்றே கருதத் தோன்றுகிறது.

காரணம் ஆட்சி மாற்றத்திற்காக ஏங்கிக் கொண்டிருத்த மக்கள் மனங்களில் மக்கள் கூட்டணி என்ற புதிய சக்தி தனது சிறகுகளை விரித்து, ஆழப் பதிந்து அமர்ந்துவிட்டதை இந்த கிளானா ஜெயா கூட்டம் தெளிவாக எடுத்துக் காட்டியது.

இன்று பொதுத்தேர்தல் முடிந்து நாளை பிறக்கும் புதிய விடியல் மத்திய அரசாங்கத்தை அமைக்கப்போகும் மக்கள் கூட்டணியை வரவேற்க காத்திருக்கும் என்பது உறுதி என்பதற்கு முன்னோட்டமாக அமைந்தது கிளானா ஜெயா பிரச்சாரக் கூட்டம்.

-நமது நிருபர்