Home கருத்தாய்வு ஜோகூரில் மாற்றத்திற்கான அதிர்வலைகள் ஆரம்பமாகுமா?

ஜோகூரில் மாற்றத்திற்கான அதிர்வலைகள் ஆரம்பமாகுமா?

831
0
SHARE
Ad

State-by-State-Johor

#TamilSchoolmychoice

ஜோகூர், மே 5 – இந்த பொதுத் தேர்தலில் மக்கள் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் விதமாக முதல் கட்ட அதிர்வலைகள்  தேசிய முன்னணியின் கோட்டையான ஜோகூர் மாநிலம் முழுவதும் ஏற்படும் என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.

ஏற்கனவே ஜசெக வென்றுள்ள பக்ரி தொகுதியைத் தவிர்த்து, கேலாங் பாத்தா, கூலாய், குளுவாங் மற்றும் செகாமாட் நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றும் எதிரணியினரின் வாய்ப்புகள் பிரகாசமாகவே காணப்படுகிறது.

ஆனால் இந்த அலைகள் நாடு முழுமையிலும் தே.மு.வின் மற்ற இடங்களையும் கைப்பற்றும் பேரலையாக மாறுமா என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.

பிகேஆர் கூட்டணி முன்னணி வகிக்கும் இடங்கள்

கேலாங் பாத்தாவில் முன்னாள் ஜோகூர் மாநில மந்திரி பெசார் கனியை எதிர்த்து ஜசெகவின் லிம் கிட் சியாங்-கும்,கூலாயில், ஜசெகவின் தியோ நி சிங்-கும்,குளுவாங்கில் ஜசெகவின் லியூ சின் தொங்-கும், சிகாமட்டில் ம இ காவின் சுப்பிரமணியத்தை எதிர்த்து பிகேஆரின் சுவா ஜூய் மெங்கும் பக்ரியில் ஜசெகவின் எர் தெக் ஹூவா-வும் வெற்றி பெறுவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

செகாமட்டைத் தவிர மற்ற இடங்களில் சீன வாக்காளர்கள் அதிகமுள்ள நிலையில் சிகாமட்டில் சீனர்களும், மலாய்க்காரர்களும் ஏறக்குறைய சமமாக உள்ளனர்.

பிகேஆருக்கு ஆச்சரியம் தரக் காத்திருக்கும் தொகுதிகள்

ஜொகூர் பாரு, பாசிர்கூடாங், பூலாய், தெப்ராவ், மூவார் மற்றும் லாபீஸ்  ஆகிய  4 தொகுதிகள் கேலாங் பாத்தாவைப் போல வாக்களிக்கும் நோக்கத்தில், ஒத்த உணர்வுகளைக் கொண்ட வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளாகும்.

இத்தொகுதிகளில் பெரும்பான்மையான மலாய் வாக்காளர்கள் மிகுந்து காணப்பட்டாலும், இங்கு தேசிய முன்னணிக்கு எதிரான  சீன மற்றும் மலாய் வாக்காளர்களின் எதிர்ப்பு அல்லது மக்களின்  மாற்றத்தை ஆதரிக்கும் போக்கால் மக்கள் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.

அப்படி மக்கள் கூட்டணி ஜோகூர் மாநிலத்தை முழுமையாகக் கைப்பற்றினால் அதற்கு மூன்று காரணங்கள் முதன்மையாக அமையக்கூடும். அவை  மலாய் இனத்தவரின் தே.மு.விற்கு எதிரான எதிர்மறை உணர்ச்சி, புதிய வாக்காளர்கள் மற்றும்  சீன வாக்காளர்களின் அதிகப்படியான ஆதரவு  ஆகியவையாகும்.

மலாய்க்காரர்களின் மனமாற்றம்

ஜோகூர் மாநிலத்தில் உள்ள பெரும்பான்மையான மலாய்க்காரர்கள், மக்கள் கூட்டணி பரப்புரைகளில் ஆர்வமுடன் கலந்து கொள்வதும்,  அக்கூட்டணியின் பிரச்சாரங்களை ஆமோதிப்பது போல அமைதியுடன் கேட்டு ஆதரவு கொடுப்பதும்  அவர்கள் மாற்றத்திற்கு தயாராகிவிட்டதை அரசியல் பார்வையாளர்களுக்கு உணர்த்தியுள்ளது.

புதிதாக பதிந்துள்ள இளம் வாக்காளர்களின் அமோக அதரவு

அடுத்து இத்தனை தேர்தல்களிலும் இல்லாத அளவிற்கு  சச்சரவுகள் காணப்பட்ட இத்தேர்தலில் தங்களின் வாக்களிக்கும் அதிகாரம் ஆட்சிமாற்றத்தையே கொண்டுவரமுடியும் என இளம் வயது வாக்காளர்களுக்கு உணர்த்தியதும் இந்த பொதுத் தேர்தலே ஆகும்.

13வது பொதுத்தேர்தலில் புதிதாக 2.6 மில்லியன் வாக்காளர்கள் புதிதாக பதிந்து கொண்டுள்ள நிலையில், இது கடந்த தேர்தலைவிட 4 மடங்கு அதிகமாகும். கடந்த தேர்தலில் 638,000 பேர் மட்டுமே புதிய வாக்காளர்கள்.

ஆகவே பாசிர் கூடாங், தெப்ராவ் மற்றும் பூலாய் தொகுதிகளின் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் வெற்றி வாய்ப்பும் பிரகாசமாகவே உள்ளது.

மேலும் வெளியூர் வாக்காளர்கள் குறிப்பாக சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள், அதிலும் இளம் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனர்களின் வாக்கு வங்கி

சீன வாக்காளர்களின் ஆதரவு அதிக அளவில் இருந்த போதும், மலாய் வாக்காளர்களை அணுகுவதிலும், அதிலும் நகர்ப்புறத்திற்கு வெளியே வாக்காளர்களை கவருவதிலும் பிகேஆர் சிரமத்தையே எதிர்நோக்கியது.

மக்கள் கூட்டணி சீனர்களின் வாக்கு வங்கியையே ஜோகூரில் அதிகம் நம்பியுள்ளது என்பதும் தெளிவாகத் தெரிகின்றது.

அதனுடன் சேர்ந்து ஒரு கணிசமாக மலாய் வாக்குகளும் இந்திய வாக்குகளும் ஒன்றிணையும் போது ஜோகூரில் அதிசயிக்கத்தக்க மாற்றங்களை மக்கள் கூட்டணி நிகழ்த்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 

 

 

 

.