கோலாலம்பூர்,மே 2 – ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பிகேஆர் வேட்பாளர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் மகள் சங்கீதா ஜெயக்குமார் தனது கார் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு, தனது தந்தையுடன் சேர்ந்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.
அவரது பிரச்சாரத்தில் முக்கிய அங்கமாக இந்த கார் எரிப்பு சம்பவம் திகழ்கிறது.
கடந்த வாரம் வியாழக்கிழமை (25-04-13) இரவு சங்கீதா ஜெயக்குமாரின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், அவரது வீட்டில் பெட்ரோல் வீசியதோடு, அவரது இரு கார்களையும் பெட்ரோல் குண்டுகளை வீசி எரித்தனர். இதில் அவரது கார் முற்றிலும் சேதமடைந்தது.
சேவியர் ஜெயகுமாருக்கு தேர்தல் முகவராகப் பணியாற்றி வரும் சங்கீதா ஜெயக்குமார், கடந்த சனிக்கிழமை இரவு கிள்ளானில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்திற்கு தனது தந்தையுடன் கலந்து கொண்டார்.
அங்கு கூடியிருந்த மக்கள் முன் உரையாற்றிய சங்கீதா, இது போன்ற அரசியல் வன்முறைகள் மேலும் தொடரக்கூடாது என்றும், நம் நாட்டு இளைஞர் சமூதாயத்தை இது போன்ற சமூக விரோத செயல்களுக்கு உட்படுத்தும் அரசியல்வாதிகள் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
அது போன்ற அரசியல் வாதிகளுக்கு, வரும் பொதுத்தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் பாடம் புகட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் அந்த கூட்டத்தில், அந்த கார் எரிப்பு சம்பவம் பற்றிய காணொளியும் (வீடியோ) திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
அந்த காணொளியில் எரிந்த நிலையில் கார்களும், வீட்டின் முகப்பில் பெட்ரோல் குண்டு வீசியதற்கான அடையாளங்களும் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இச்சம்பத்தில் ஈடுபட்ட அந்த மர்ம கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு சுமார் 20 வயது இருக்கலாம் என்றும், தங்களது ஒரு வயது குழந்தையுடன் வீட்டில் இருந்த கணவரை அவர்கள் மிரட்டியதாகவும் சங்கீதா தெரிவித்தார்.
காரில் வைத்திருந்த தேர்தல் ஆவணங்கள் சேதம்
இச்சம்பவத்தில் எரிக்கப்பட்ட அந்த காரில், தேர்தல் ஆவணங்கள் பல இருந்தன என்றும், ஆனால் அவை காருக்குப் பின்னால் வைக்கப்பட்டிருந்ததால் அதிக சேதம் ஆகாமல் காப்பாற்றப் பட்டு விட்டதாகவும் சங்கீதா தெரிவித்தார்.
அக்கூட்டத்தில் சுமார் அரை மணி நேரம் பேசிய சங்கீதா ஜெயக்குமார், இறுதியாக மக்களிடம் விடை பெறும் முன், தனது தந்தை சேவியர் ஜெயக்குமாரின் சேவைகள் தொடர இந்த பொதுத்தேர்தலில்அனைவரும் அவருக்கு வாக்களிப்பதோடு, மக்கள் கூட்டணியின் மற்ற வேட்பாளர்களை ஆதரிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
– பீனிக்ஸ்தாசன்