Home நாடு தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அழியா மை அழிகிறது- பயன்படுத்தியவர்கள் புகார்!

தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அழியா மை அழிகிறது- பயன்படுத்தியவர்கள் புகார்!

508
0
SHARE
Ad

Indelible-Ink-Featureபெட்டாலிங்ஜெயா, மே 2 – குறைந்தது 7 நாட்கள் அழிக்க முடியாது என்று தேர்தல் வாரியத்தால் அறிவிக்கப்பட்ட  வாக்காளர் விரலில் வைக்கப்படும் அடையாள மை வைத்த சில நிமிடங்களிலேயே சாதாரண நீரில் கழுவினாலே போய்விடுகிறது என்று புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

#TamilSchoolmychoice

பொதுத் தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக  இராணுவ மற்றும் காவல் துறையினர் வாக்களித்தபோது இந்த  மை உடனே டெட்டால் அல்லது தின்னர் எனப்படும் சாயம் துடைக்கும் மருந்தால் சுத்தமாக கழுவ முடிகிறது என புகார்கள் எழுந்துள்ளன.

பயன்படுத்திய, பெயர் சொல்ல விரும்பாத இன்னும் சிலர் சாதாரண நீரே உடனடியாகக் கழுவ போதுமானதாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

நெகிரி செம்பிலான் பாஸ் செயலாளர், தங்கள் கண்காணிப்புக் குழுவினர், வாக்களித்த சிலநிமிடங்களிலேயே இராணுவ வீரர் ஒருவர் இவ்வாறு கைகளை கழுவுவதைப் பார்த்ததாகத்  தெரிவித்துள்ளார்.

நூருல் மற்றும் சுவா காவல் நிலையத்தில் புகார்

இதற்கிடையே பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் இதுகுறித்து செந்தூல் காவல்நிலையத்திலும், மற்றொரு உதவித் தலைவர் தியான் சுவா பத்துகேவ்ஸ் காவல்நிலையத்திலும் புகார் செய்துள்ளனர்.

இத்தகவலை எப்படி உண்மை என்று நம்புவது என்று அவர்களிடம் கேட்கப்பட்ட போது, நூருல், பத்திரிக்கையாளர்கள் முன்பு அந்த மை எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது காட்டினார்  என்று தெரிவித்தார்.

சுவா கூறுகையில் தான் புகார் செய்த போலீஸ் அதிகாரியே கையைக் கழுவிவிட்டார் என்றும், இது தங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தருவதாகவும் தெரிவித்தார்.

இந்த அழியா மை அழிக்கப்பட்ட விரல்களின் புகைப்படங்கள் முகநூல்களில் உலாவந்த வண்ணம் உள்ளது.

பெர்சேயின் வேண்டுகோளுக்கிணங்க ஆவி வாக்காளர்கள் வாக்களிப்பதைத் தடுக்கும் ஒரு முயற்சியாக இவ்வாறு மை இடும் நடைமுறை கோரப்பட்டது.

ஆனால் அதன் போலித்தனத்தை உபயோகித்தவர்களே தெரிவிக்கும் போது நிச்சயம் சந்தேகம் எழவே செய்கிறது.

தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அஸிஸ் பதவி விலக வேண்டும்-சுவா

தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அஸிஸ் முகமட் யூசுப் பதவி விலக வேண்டுமாய் பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அப்துல் அஸிஸிடம் கருத்துக்கேட்டபோது, புகார் செய்துள்ளார்கள். உண்மை நிலையை போலீஸே விசாரிக்கட்டும் என்றார்.

இதற்கிடையே தேர்தல் கண்காணிப்பு உறுப்பினர் மரியா சின் தேர்தலுக்கு முன்பே இதுகுறித்து தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால் அவர்களோ முறைப்படி கடிதம் எழுதச்சொல்வதாகவும், அப்படிப்பட்ட நடைமுறைகளுக்கு கால அவகாசம் போதாது என்றும் குறிப்பிட்டார்.

மலேசியக்கினி இணைய செய்தித்தளத்திற்கும் புகார்.

இந்த மை அழியும் விவகாரம் பற்றி , தன்னை காவல் துறையைச் சேர்ந்தவர் என்று மட்டும் அடையாளம் காட்டிக்கொண்ட  வாக்காளர் ஒருவர் மலேசியக்கினி இணைய செய்தித்தளத்திற்கு புகார் செய்துள்ள நிலையில் இதுபோன்ற புகார்களை நாடெங்கிலுமிருந்து தாங்களும் பெற்றுள்ளதாக தனியார் தேர்தல் கண்காணிப்பாளர்களும் தெரிவித்துள்ளனர்.