Home 13வது பொதுத் தேர்தல் தேர்தல் களம் நேரடிப் பார்வை: இன்முக பிரச்சாரத்தால் கவரும் நூருல் இசா!

தேர்தல் களம் நேரடிப் பார்வை: இன்முக பிரச்சாரத்தால் கவரும் நூருல் இசா!

620
0
SHARE
Ad

Nurul Izzah Anwarமே 1 – கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் களங்களின் சூழ்நிலையையும் பிரச்சாரத்தையும் நேரடியாகக் கவனித்து வாசகர்களுக்கு விளக்கும் நமது நகர்வலங்களின் ஒரு பகுதியாக நாம் தேர்ந்தெடுத்தது லெம்பா பந்தாய் தொகுதி.

அங்கு மதியம் 3.00 மணியளவில் கெரிஞ்சி வட்டாரத்தில் உள்ள, பந்தாய் பெர்மாய் அடுக்கு மாடி குடியிருப்புக்கு லெம்பா பந்தாய் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் நூருல் இசா பிரச்சாரம் செய்ய வருகின்றார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மூன்று மணிக்கு துவங்கிய நிகழ்ச்சிக்கு நூருல் இசா தனது கடுமையான பிரச்சாரங்களுக்கிடையே சுமார் 6 மணியளவில்தான்  வந்து சேர முடிந்தது.

#TamilSchoolmychoice

இருப்பினும் தனது தாமதத்தை தணிக்கும் விதமாக அவர் நடந்து கொண்ட பாங்கும், இன்முகத்துடன் மக்களை அவர் அணுகிய முறையும் அங்கு கூடியிருந்தவர்களை எளிதில் கவர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

அவர் அங்கு வந்தபோது அங்கிருந்தவர்கள் அவருடன் கைகுலுக்க ஆர்வமுடன் முன்வந்தனர். அவரும் இன்முகத்துடன் கைகுலுக்கி வந்திருந்தவர்களை நலம் விசாரித்தார்.

என்னிடம் சரிஷாட்டை தோல்வியடைய வைத்ததற்கு நன்றி- நூருல்

பின்பு உரையாற்றிய அவர், கடந்த பொதுத் தேர்தலில் மூன்று தவணைகள் இருந்த சரிஷாட்டை வீட்டுக்கனுப்பி தன்னை வெற்றி பெறச்செய்ததற்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

எல்லோரையும் ’அங்கிள்-ஆன்ட்டி’ என்றழைத்த நூருல் இதுவரை தன்னால் இயன்றதையெல்லாம் தொகுதி மக்களுக்கு செய்துள்ளதாகக் கூறினார். மக்களும் அதை ஆமோதிப்பது போல் கைத்தட்டினர்.

தாங்கள் சிலாங்கூரில் இலவச தண்ணீர் விநியோகம் செய்ததால் அரசு நொடித்துப்போய்விடும் என்று கூக்குரல் இட்டவர்களுக்கு, தங்கள் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு கருவூலத்தின் கையிருப்பை கூட்டியிருப்பதை புள்ளி விவரத்துடன் சொன்னார்.

மேலும் தங்களின் தேர்தல் அறிக்கையில்  எண்ணை விலை  மற்றும் கார்களின் விலை குறைக்கப்படும் என்று குறிப்பிட்டபோது அது சாத்தியப்படாத ஒன்று என்று அறிக்கைகள் விட்ட தேசிய முன்னணி இப்போது அவர்களும் அதையே தாங்களும் செய்வதாக சொல்லியிருக்கிறார்கள் என்று நூருல் சொல்லியபோது, “பாரிசான்-ச்சூரி ச்சூரி” என்ற வார்த்தைகள் ஆங்காங்கே கேட்டது.

“இலவசக் கல்வி, எண்ணை விலை, கார்கள் விலை குறைப்பு உடனே அமல்படுத்தப்படும்”

எண்ணெய் விலை குறைந்தாலே பொருட்களின் விலை தானே குறையும் என்ற நூருல் பிகேஆர் ஆட்சிக்கு வந்தவுடனேயே அதாவது 7ஆம் தேதியே எல்லாம் அமலுக்கு வரும் என்றார்.

இத்தேர்தலில் தங்களுக்கு ஒரு வாய்ப்புத் தரச்சொன்ன நூருல் நஜிப்புக்கும் ஒரு பதவி தரவேண்டும் என்ற போது பலர் எதிர்கட்சித் தலைவர் என்றும் சிலர் முதலில் அவர் ஜெயிக்கட்டும் என்று மலாய் மொழியில் சத்தமிட்டுக்கூறினர்.

மேலும் தான் தனது சம்பளம் முழுவதையும் தொகுதிக்கே செலவிடுவதாகவும், அவ்வப்போது தனது கணவரிடமும் பிடுங்கி செலவு செய்வதாகவும் நூருல் சொன்னபோது கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

நான் அசுந்தா மாணவி, எங்களை அப்பா ஆடம்பரமாக வளர்க்கவில்லை

தன்னையும் தன் சகோதரிகளையும் அப்பா அன்வார் எந்த உயர்தர பள்ளிக்கும் அனுப்பவில்லை என்றும் தாங்களும் மற்றவர்களைக் போல் அசுந்தா பள்ளியில் படித்தவர்கள் தான் என்றும் உடல் நலமில்லாவிட்டால் யுனிவர்சிட்டி மருத்துவமனைக்குத் தான் செல்வோம் என்றும் தெரிவித்தவர் ஆகவே நடுத்தர மக்களைப் போலவே வாழ்ந்ததால் நிச்சயம் அவர்கள் தேவைகளை தன்னால் நன்கு உணர்ந்து செயலாற்றமுடியும் என்று உறுதியளித்தார்.

தேர்தல் வெற்றிக்குப் பின் குறிப்பிட்ட சிலரை ஜெயிலுக்கு அனுப்ப முடியுமா என்று ஓரிருவர் கேட்டதற்கு, முதலில் விசாரிப்போம். அவர்களிடம் உள்ள பணத்தை வாங்கி திட்டங்களை நிறைவேற்றுவோம், பின்பு தவறுகள் உறுதி செய்யப்பட்டால் உங்கள் துணையுடன் அதை செய்வோம் என்றார்.

மேலும் மற்றவர்களைப் போல் பண்டிகைக் காலங்களில் தான் அள்ளி இறைக்காவிட்டாலும் பல இன மக்கள் வாழும் இங்கு,  அனைத்து பண்டிகைக்கும் தாம் தவறாது வருகை தந்து மக்களை சந்திப்பதை அவர் நினைவுகூர்ந்தார்.

தான் இன்னும் சில இடங்களுக்கச் செல்ல வேண்டி உள்ளதால் அனைவரையும் வணங்கி தமக்கு வாக்களிக்கக் வேண்டுமாய் நூருல் கேட்டுக்கொண்டார்.

அனைவரும் பெருங்குரலெடுத்து ‘இனி காலி லா’ என அவருக்கு உற்சாகமாக மக்கள் கூட்டணி வெல்வது உறுதி என்பதற்கு ஆதாரமாக எங்கள் வாக்கு உங்களுக்கே என்று தேசிய மொழியில் முழக்கம் எழுப்பி அவரை வழியனுப்பி வைத்தனர்.

முக்கிய அறிவிப்புகள் 

ஓட்டு போடும் சீட்டில் கையில் வைத்த மை பட்டுவிட்டால் அந்த ஓட்டு செல்லாது என்றும் வேறொரு வாக்குச்சீட்டை கேட்டு வாங்கி மீண்டும் முத்திரை குத்தவேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.

மாற்றத்தை உருவாக்க எல்லோரும் தவறாது வாக்களிக்கச் செல்ல வலியுறுத்தப்பட்டார்கள்.

தேநீர் விருந்துடன் கூட்டம் முடிந்தவுடன், மக்கள் கூட்டணி கட்சி ஆதரவாளர்கள் பலர் அடுத்து இந்த இடத்தில் கூட்டம், அந்த இடத்தில் கூட்டம் என ஆளுக்கொரு திசையாக மக்கள் கூட்டணி தலைவர்கள் உரையைக் கேட்க விரைவதாக கூறிச் சென்றனர்.

வந்திருந்தவர்களில் அதிகமானோர் இளம் வயதினர்களாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவர்களால் தான் நாட்டின் தலையெழுத்து மாறுமோ?

-சா.விக்னேஸ்வரி