Home 13வது பொதுத் தேர்தல் கேமரன் மலை தொகுதி: சிங்கத்தின் வாயில் சிக்கிக் கொண்ட நிலையில் பழனிவேல்!

கேமரன் மலை தொகுதி: சிங்கத்தின் வாயில் சிக்கிக் கொண்ட நிலையில் பழனிவேல்!

689
0
SHARE
Ad

Palanivelகேமரன் மலை, ஏப்ரல் 30- “முதலை வாயில் இருந்து தப்பித்து சிங்கத்தின் வாயில் மாட்டிக் கொண்டதாக” தமிழில் ஒரு பழமொழி கூறுவார்கள்.

அதைப் போன்றதொரு நிலையில் இருக்கிறார் ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் என்று கருதுகின்றார்கள் கேமரன் மலை தொகுதியின் நிலவரத்தைக் கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்கள்.

கேமரன் மலை மிகவும் பாதுகாப்பான தொகுதி என்று தேர்ந்தெடுத்து பழனிவேல் அத்தொகுதியில் வேட்பு மனுவைச் சமர்ப்பித்தார். ஆனால் இந்த தொகுதியில் தற்போது ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளதோடு, வேட்பாளர்களுக்கிடையிலான போட்டியும் கடுமையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

2008 பொதுத் தேர்தலை விட தேசிய முன்னணிக்கு இந்த முறை மோசமான நிலைமை

பழனிவேல் போட்டியிடும் கேமரன் மலை தேசிய முன்னணியைப் பொறுத்தவரை தற்போது 2008ஆம் ஆண்டுத் தேர்தலை விட மோசமான நிலைமையில் இருக்கிறது. அதனால் ம.இ.கா. கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் தக்க வைத்துக்  கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத உள்ளூர் ம.இ.கா. தலைவர் ஒருவர்  கூறுகையில், தேசிய முன்னணி கட்சிகளுக்குள் உள்ளுக்குள் நடக்கும் கீழறுப்பு வேலைகள் பழனிவேலின் வெற்றி வாய்ப்பை பறித்து விடும் என்றும் ஜ.செ.க. வேட்பாளர் மனோகரன் இந்த 5 முனைப் போட்டியில் வெற்றி பெற்று விடுவார் என்றும் தெரிவித்தார்.

இத்தொகுதியில் பழனிவேல் வேட்பாளராக நிறுத்தப்பட்டதற்கு உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பு இருந்தது. ம.இ.கா. உதவித் தலைவர் டத்தோ எஸ்.கே.தேவமணி கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு  இரு முறை வென்று ம.இ.கா.வின் பாதுகாப்பான தொகுதியாக அதனைத் தக்க வைத்து கொண்டிருந்தார்.

அவருக்கு எதிர்மறையான புகார்கள் ஏதுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இம்முறை அவரை சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட அனுப்பி வைத்துவிட்டு பழனிவேல் தேசியத் தலைவர் என்ற முறையில் இந்த தொகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

கடுமையான போட்டியை வழங்கும் மனோகரன்

பழனிவேலுவுக்கு பலத்த போட்டி எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இம்முறை பழனிவேலுவை எதிர்த்து தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மனோகரன் ஜசெக சார்பாக நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியான போது கேமரன் மலையெங்கும் அதிர்ச்சி அலைகள் பரவின.

இத்தொகுதிக்கு புதியவராக இருந்தாலும் அவருடைய கடந்த கால தேர்தல் அனுபவத்தை கொண்டு கேமரன் மலை தொகுதியில் பழனிவேலுவின் ஆதரவுக் கோட்டைகளை மனோகரன் கொஞ்சம் கொஞ்சமாக தகர்த்து வருகிறார்.

ஜ.செ.க.கட்சி சார்பில் போட்டியிடும் மனோகரனுக்கு சீன வாக்காளர்களின் வாக்குகள் மட்டும் விழும் என்று இருந்த நிலைமை மாறி தற்போது அவர் பூர்வகுடி வாக்காளர்களையும் கவர்ந்து வருகிறார்.

சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளூர்வாசிகள் என்பதால் வாக்குகள் பிரியும்

மேலும் சுயேச்சையாகப் போட்டியிடுபவர்கள் உள்ளூர்வாசிகள் என்பதால் அவர்களால் தேசிய முன்னணிக்கு செல்லக் கூடிய கணிசமான வாக்குகள் திசை திரும்பி விடும் என்றும் தெரிகிறது.

குறிப்பாக சுயேச்சை வேட்பாளரான அழகு என்பவர் முன்னாள் ம.இ.கா. தலைவராவார். அவருக்கு பூர்வகுடி மக்களுடன் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாகவும் அதனால் பழனிவேலுவுக்கு கிடைக்க கூடிய வாய்ப்புள்ள   வாக்குகளை அவர் பிரித்து விடுவார் என்றும் அதன் மூலம் பழனிக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகின்றது.

அதே போல் பெர்ஜாசா கட்சி சார்பில் போட்டியிடுபவர் மலாய் வேட்பாளர் என்பதால் மலாய் வாக்காளர்களில் கொஞ்சம் பேரை அவர் கவர்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்படியாக திடீரென்று தலைகீழாக மாறிவிட்ட கேமரன் மலை நிலவரத்தை வைத்துப் பார்க்கும்போது ம.இ.கா. கேமரன் மலை நாடாளுமன்றத்தை தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேமரன் மலைத் தொகுதியை மீண்டும் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போனால் அதனால் பழனிவேலுவின் அரசியல் எதிர்காலமும் கேள்விக் குறியாகி விடும் என்று அந்த உள்ளூர் ம.இ.கா தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை கேமரன் மலை தொகுதிக்கு 37.4 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்கியுள்ளதாகவும், தனக்கு வாக்களித்தால் இந்த மானியம் அதிகரிக்கப்படும் என்று பழனிவேல் தொடர்ந்து பத்திரிகைகளில் அறிக்கை விடுத்து வருவதோடு விளம்பரங்கள் செய்தும் வருகின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

-பிரி மலேசியா டுடே