Home அரசியல் தேர்தல் களம் நேரடி பார்வை: மகளுக்காக அன்வார் லெம்பா பந்தாயில் இறுதிநேர பிரச்சாரம் – 30...

தேர்தல் களம் நேரடி பார்வை: மகளுக்காக அன்வார் லெம்பா பந்தாயில் இறுதிநேர பிரச்சாரம் – 30 ஆயிரம் பேர் திரண்டனர்!

581
0
SHARE
Ad

Anwar-Lembah-2-Featureலெம்பா பந்தாய், மே 4 – தேர்தல் பரப்புரைகளுக்கு இறுதி நாளான இன்று, தனது மகள் போட்டியிடும் லெம்பா பந்தாய் தொகுதியில் அவருக்கு ஆதரவாக அன்வார் இப்ராகிம் தனது இறுதிக் கட்ட பிரச்சாரத்தை முடுக்கிவிட்டார்.

லெம்பா பந்தாய் தொகுதியில் மலாய்க்கார வாக்காளர்களை அதிகம் கொண்ட கம்போங் கெரிஞ்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி வர்த்தக மையத்திற்கு அருகில் உள்ள நீண்ட சாலையில் மக்கள் வரிசையாக அமர்ந்து அன்வாரின் வருகைக்காக காத்திருந்தனர்.

மகள் வருவார் முன்னே தந்தை வருவார் பின்னே என்பது போல முதலில் வந்து சேர்ந்த லெம்பா பந்தாய் வேட்பாளர் நூருல் இசா பக்கத்திலிருந்து பள்ளிவாசலில் தனது மாலை நேர தொழுகையை முடித்துக் கொண்டு மேடையேறி முதலில் பேசினார்.

#TamilSchoolmychoice

சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஒரு மன்னருக்குரிய வரவேற்பைப் போல வாத்தியக் கருவிகளின் சத்தம் காதைக் கிழிக்க, அன்வார் கூட்ட நெரிசலில் சிக்கி, மேடையை வந்தடைந்தார்.

அந்த கட்டத்தில் அவரது உரையைக் கேட்க அந்த வட்டாரத்தைச் சுற்றி ஏறத்தாழ 30ஆயிரம் பேர் திரண்டிருந்தனர்.

வாக்களித்தபின் வாக்குச் சாவடியைக் காவல் புரிவோம்

நாளை நடைபெறும் வாக்களிப்பில் வெளிநாட்டுக்காரர்கள் திருட்டுத் தனமாக வாக்களிக்கும் நிலைமை ஏற்படலாம் என எச்சரித்த அன்வார் இப்ராகிம், ஒவ்வொருவரும் வாக்களித்தபின், உடனடியாக வீட்டுக்கு சென்று விடாமல் அந்த வாக்குச் சாவடியிலேயே நின்று வெளிநாட்டுக்காரர்கள் யாரும் வந்து வாக்களிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அன்வார் கேட்டுக் கொண்டார்.

அவ்வாறு போலி வாக்காளர்கள் அல்லது வெளிநாட்டுக்கார வாக்காளர்கள் யாராவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் அங்கேயே மக்கள் கூட்டணி கட்சி ஆதரவாளர்களால் தடுத்து வைக்கப்பட்டு போலிசாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் அன்வார் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

வழக்கம்போல் 6ஆம் தேதி புத்ரா ஜெயாவைக் கைப்பற்றுவது உறுதி என்றும் முதல் கட்டமாக பெட்ரோல் விலை குறைப்பு, பிடிபிடிஎன் கடன்கள் ரத்து, ஆகியவை அமுல்படுத்தப்படும் என்றும் அன்வார் பலத்த கரவொலிகளுக்கிடையில் அறிவித்தார்.

அவ்வப்போது சத்தமிடும் வாத்தியக் கருவிகளைத் துணை கொண்டு கூடியிருந்த கூட்டத்தினர் ஆதரவு ஒலி எழுப்பிக் கொண்டே இருந்தனர்.

அன்வார் உரை முடிந்ததும் கலைந்து செல்ல ஆரம்பித்த கூட்டம் அங்கிருந்து முற்றாக கலைவதற்கு ஏறத்தாழ அரை மணி நேரம் பிடித்தது.

அந்த சுற்று வட்டாரமே போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008 பொதுத் தேர்தலின்போதும் வாக்களிப்பிற்கு முதல் நாள் கோலாலம்பூரில் கடைசிக்கட்ட பிரச்சாரத்தை லெம்பா பந்தாய் தொகுதியில் அன்வார் மேற்கொண்டார்.

இங்கிருந்து இன்றிரவு பினாங்கு செல்லும் அன்வார் பினாங்கில் தான் போட்டியிடும் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் இறுதிக் கட்ட பிரச்சாரத்தை முடித்துவிட்டு, நாளை தனது தொகுதியில் உள்ள புக்கிட் மெர்தாஜாம் பகுதியில் வாக்களிப்பார்.

அதன் பின்னர் அவர் மீண்டும் கோலாலம்பூர் வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மலேசியாவின் 7 வது பிரதமராக அவர் பதவியேற்பாரா என்பது நாளை இரவுக்குள் தெரிந்துவிடும்!

-இரா.முத்தரசன்