Home கருத்தாய்வு தேர்தல் களம் நேரடிப் பார்வை: கர்ப்பால் – அம்பிகா பிரச்சாரத்தால் அதிர்ந்தது கிள்ளான்

தேர்தல் களம் நேரடிப் பார்வை: கர்ப்பால் – அம்பிகா பிரச்சாரத்தால் அதிர்ந்தது கிள்ளான்

744
0
SHARE
Ad

Karpal-Function-Klangகிள்ளான், ஏப்ரல் 28- நேற்று முன்தினம் இரவு (ஏப்ரல் 26) ஜசெக சார்பாக சார்ல்ஸ் சாண்டியகோ போட்டியிடும் கிள்ளானில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அம்பிகா சீனிவாசன், ஜசெக தலைவர் கர்ப்பால் சிங் ஆகியோரின் வருகையால் களை கட்டியது.

#TamilSchoolmychoice

அந்த பிரச்சாரக் கூட்டத்திற்கு வருகை புரிந்த கர்ப்பாலுக்கு மக்கள் அமோகமான ஆரவார வரவேற்பளித்தனர். அன்று நடந்த மற்றொரு பிரச்சாரக் கூட்டத்தில் தான் தவறி விழுந்ததை சுட்டிக் காட்டி கர்ப்பால் பேசியதை கூடியிருந்த கூட்டத்தினர் வெகுவாக ரசித்தனர்.

“முன்னதாக தான் சென்ற கூட்டத்தில்  தவறி விழுந்ததால் தமக்கு ஏற்பட்ட அடி சிறியதுதான்”  என்று கூறிய கர்ப்பால் ஆனால் எதிர்வரும் மே 5-இல் தேசியமுன்னணிக்கு விழப் போகின்ற அடிதான் பெரியதாக இருக்கும் என உறுதியுடன் கூறினார்.

தங்கள் கூட்டணி புத்ராஜெயாவை கைப்பற்றியவுடன் அமையவிருக்கும் புதிய அரசு முதல் கட்டமாக சில  முக்கிய முடிவுகளை எடுக்கும் என்று கூறிய கர்ப்பால், பெட்ரோல் விலையைக்குறைப்பது, லினாஸ் அரிய மண் ஆலையை மூடுவது ஆகியவை அவற்றுள் அடங்கும் என்று பலத்த கைத்தட்டல்களுக்கிடையில் கூறினார்.

மேலும் அதிகாரத்தை தவறாகப்பயன்படுத்துவோர் தண்டிக்கப்படுவர் என்று தெரிவித்த அவர் அதற்கு ஏதுவாக அரசாங்க தலைமை வழக்கறிஞர் மாற்றப்படுவார் என்றும் தெரிவித்தார்.

மக்கள் கூட்டணி கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை அவசியம்

மக்கள் கூட்டணியின் மூன்று கட்சிகளுக்குமிடையேயான ஒற்றுமை மிகவும் அவசியம் என்றும் கர்ப்பால் வலியுறுத்தினார். ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் ஜசெக வேட்பாளர்கள் பாஸ் சின்னத்தில் போட்டியிடலாம் என்று கூறி தங்கள் சின்னத்தில் போட்டியிட அனுமதித்த பாஸ் கட்சியினருக்கு தனது நன்றியை கர்ப்பால் தெரிவித்துக்கொண்டார்.

“அதற்காக ஜசெக ஹுடுட் சட்டத்தை ஏற்றுக்கொண்டதாக ஆகாது. எங்கள் நிலைப்பாடு என்றுமே ஹுடுட் சட்டத்திற்கு எதிரானது தான் என்று ஆணித்தரமாக வலியுறுத்தினார் கர்ப்பால். சட்டம் இது ஒரு இஸ்லாமிய நாடு என்று ஒருபோதும் கூறவில்லை என்றும்  அது இந்நாட்டின் அதிகாரப்பூர்வமான சமயமே என்றும் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்கிறோம், மதிப்பளிக்கிறோம்” என்றும் அவர் கூறினார்.

இஸ்லாம் போலவே, மற்ற சமயங்களும் இங்கு சுதந்திரமாக செயல்படமுடியும் என்பதை சட்டம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதையும் கர்ப்பால் சுட்டிக்காட்டினார்.

அடுத்து ஊழலைப் பற்றி பேசிய கர்ப்பால் சிங் புதிய அரசாங்கத்தின் முதல் நடவடிக்கையே சரவாக் முதலமைச்சர் தாயிப் முகமட் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விசாரிப்பதாகும் என்றார். தாயிப் இப்போதே நல்ல வழக்கறிஞரைப் பார்த்துவைத்துக் கொள்வது நல்லது என்றவர், ஆனால் திறமையான வழக்கறிஞர்கள் எல்லாம் மக்கள் கூட்டணியில்தான் இருக்கிறார்கள்-அவர்களும் அவருக்கு சார்பாக வரமாட்டார்கள் என்று நகைச்சுவையுடன் மக்களின் சிரிப்பொலிகளுக்கிடையே கர்ப்பால் கூறினார்.

பினாங்கு நிலவரத்தைப் பற்றி பேசிய கர்ப்பால், 2008 தேர்தலில் மசீச மற்றும் மஇகாவை அடியோடு துடைத்தொழித்துவிட்டு அனைத்து இடங்களையும் ஜசெக வென்றது என்றவர் இம்முறை அங்கே எப்படியாவது இடம் பிடிக்கலாமா என்று பார்க்கிறார்கள் ஆனால் இம்முறையும் அவர்களால் ஒரு இடத்தைக் கூட பிடிக்கமுடியாது. ஒட்டு மொத்தமாக காணாமல் போய்விடுவார்கள் என்றார்.

பினாங்கு மாநிலத்திற்கு லிம் குவான் எங் வழங்கி வரும் தலைமைத்துவத்திற்கு ஈடாக இன்றைக்கு தலைவர்கள் யாரும் இல்லை என்றும் கர்ப்பால் கூறினார்.

அன்வாரே பிரதமர்- கர்ப்பால் சிங்

மக்கள் கூட்டணி வெற்றிக்குப்பின் யார் பிரதமர் என்று கேள்வி எழுப்பிய கர்ப்பால் அது நிச்சயம் அன்வார் தான் என்று பதிலும் அளித்தார். அவருக்கே பிரதமராகும் முழுத்தகுதியும் உண்டு என்றவர் ஜசெகவும் அன்வாரையே ஆதரிக்கும் என்றார்.

அதற்கு அங்கு கூடியிருந்த மக்கள் பலத்த கரவொலியால் தங்கள் மகிழ்ச்சியை அவருக்கு வெளிப்படுத்தினர்.

அன்வாரைப் பற்றி குறிப்பிடும்போது, அவருக்கு பிரதமராகும் அத்துணை அம்சங்களும் பொருந்தியிருக்கக் காரணம் அவர் நிதியமைச்சராக மட்டுமன்றி துணைப்பிரதமராகவும் இருந்தவர் என்றவர் அதனையும் மீறி சிறைச்சாலை துன்பத்தையும் பெற்று வந்தவர் என்றார்.

அன்வார் அனுபவித்த அத்துணைத் துன்பங்களுக்கும் பதில் சொல்ல வேண்டியவர் மகாதீரே என்றும் அவர் இதற்கெல்லாம் கண்டிப்பாக பதில் சொல்லியே தீரவேண்டும் என்றவர், இன்று  பணக்காரர் பட்டியலில் 13வது இடத்தில் இருப்பது மகாதீரின் மகனே என்றும் தங்களுக்கு அரசியலில் சம்பந்தமில்லை என்றவருக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று கர்ப்பால் வினவினார்,

மகாதீர் ஒரு இனவெறியர்-கர்ப்பால்

தன்னைப் பொறுத்தவரை நாட்டின் முதன்மையான இனவெறியர் மகாதீரே என்று குற்றம்சாட்டிய கர்ப்பால் ஏனெனில் அவர் தான் இந்துக்களை இழிவுபடுத்திய சூல் நோர்டினையும், பைபிளை எரிக்கச் சொன்ன இப்ராஹிம் அலியையும் வேட்பாளர் ஆக்கியவர் என்பதோடு அலியின் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டினார்.

யாருடைய முத்தமும் சுல்கிப்ளி நோர்டினை ஜெயிக்க வைக்கமுடியாது என்று ஆணித்தரமாகக் கூறினார்.

மக்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும் போது தவறு செய்தவர்கள் நீதிமன்றத்தில் பதில் கூற தயாராக வேண்டும் என்றவர், அதில் முதன்மையானவர் தற்போதைய பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமரும் அவருக்குப் பின்னணியில் இருக்கும் அவருடைய எஜமானர் ரோஸ்மாவும் என்றார்.

“C-4 என்ற வெடிகுண்டைப் பெற நாட்டின் தற்காப்பு அமைச்சரின் அனுமதி பெற வேண்டும்.  அல்தான்துன்யா சம்பவம் நடைபெற்ற போது அப்போதைய தற்காப்பு அமைச்சராக இருந்தவர்  யார்?” என வினவிய கர்ப்பால் தனியார் துப்பறிவாளர் பாலா, நஜிப்பை இக்குற்றச்சாட்டில் சம்பந்தப்படுத்தியதை சுட்டிக்காட்டினார்.

துரதிர்ஷ்டவிதமாக பாலா இப்போது இல்லாவிட்டாலும், உண்மையான கொலையாளியை கண்டுபிடிக்க நஜிப்-ரோஸ்மாவை தொடர்புபடுத்தி தீபக் வழங்கிய தகவல்களும்  பாலாவின் வாக்குமூலங்களும் இந்த வழக்கை மீண்டும் ஆரம்பிக்க போதுமானதாக உள்ளதாகவும் அது ஒரு புது அரசாங்க தலைமை வழக்கறிஞர் நியமனத்தால் மட்டுமே சாத்தியப்படும் என்றார் கர்ப்பால்.

சுல்கிப்ளி நோர்டின் பற்றி ம.இ.கா என்ன செய்தது?

மேலும் இந்தியர்களைப் பற்றி பேசிய கர்ப்பால் தான் ஒரு இந்தியன் என்றும் சுல்கிப்ளி விஷயத்தில் ம இ கா என்ன செய்தது, இந்தியர்கள் மேல் அவர்களது அக்கறை என்ன என்று கேள்வி எழுப்பினார்.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியர்கள், சீனர், மலாய்க்காரர்,  இபான்ஸ் மற்றும் கடசான்கள் அனைவர் மீதும் அக்கறையுடன் செயல்படுவோம் என்றார்.

நாட்டில் குற்றச்செயல்கள் பெருகிவிட்டதாகக் கூறிய கர்ப்பால் தங்கள் ஆட்சியில் இதற்கு அதிக அளவு முக்கியத்துவம் அளிப்போம் என்று உறுதியளித்தார். பொதுத்துறை மற்றும் கல்வி பற்றி குறிப்பிடும்போது அது அவரவர் ஆற்றலின் அடிப்படையில் அமையவேண்டும் என்றார்.

சார்லஸ் சாண்டியகோ போன்ற அருமையான வேட்பாளருக்கு வாக்களித்து  மீண்டும் அவரை கிள்ளானில் வெற்றிபெறச் செய்யுமாறும் அவர் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

அடுத்ததாகப் பேச இருந்த அம்பிகா சீனிவாசனின் உரையைக் கேட்க ஆர்வத்துடன் கூடியிருந்த கூட்டத்தின் எண்ணிக்கை ஏறத்தாழ மூவாயிரத்தையும் தாண்டியிருந்தது என்பதோடு, எல்லா இனங்களைச் சேர்ந்தவர்களும் அம்பிகாவின் உரையை ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அம்பிகா ஆற்றிய உரையின் ஒரு பகுதியை கீழ்க்காணும் இணைய இணைப்பை அழுத்துவதன் மூலம் காணொளியாக (வீடியோ) காணலாம்.

please install flash
- நமது நிருபர்