Home நாடு கர்ப்பாலின் இடத்தை நிரப்பும் மகன் கோபிந்த் சிங்!

கர்ப்பாலின் இடத்தை நிரப்பும் மகன் கோபிந்த் சிங்!

1092
0
SHARE
Ad
gobind singh deo-DAP
கோபிந்த் சிங் டியோ

ஷா ஆலாம் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (12 நவம்பர் 2017) நடைபெற்ற ஜனநாயகச் செயல்கட்சியின் (ஜசெக) தேசிய மத்திய செயற்குழுவுக்கான தேர்தல் முடிவுகள் ஒரு சில அரசியல் செய்திகளையும், அந்தக் கட்சியின் எதிர்காலப் பயணம் எவ்வாறு அமையப் போகிறது என்பதையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன.

ஜசெக என்றாலே கடந்த பல ஆண்டுகளாக இரண்டு முகங்கள்தான் நினைவுக்கு வரும்!

ஒன்று, லிம் கிட் சியாங் – மற்றொன்று கர்ப்பால் சிங்!

#TamilSchoolmychoice

Karpalஏறத்தாழ 40 ஆண்டுகால மலேசிய எதிர்க்கட்சி அரசியலை இந்த இருவரும்தான் வழிநடத்தி வந்தனர். 1990-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் துங்கு ரசாலி ஹம்சா அம்னோவிலிருந்து விலகிய பின்னர் செமாங்காட் 46 கட்சியை உருவாக்கி எதிர்க்கட்சிகளோடு இணைந்து போராடினார். ஆனால், தோல்வியைத் தழுவியதால் சில ஆண்டுகளுக்குப் பின்னர், எந்த மகாதீரை எதிர்த்துப் போராடினாரோ, அதே மகாதீரை மீண்டும் தலைவராக ஏற்றுக் கொண்டு மீண்டும் அம்னோவில் இணைந்தார்.

அதன் பின்னர், 1999-ஆம் ஆண்டில் அப்போதைய துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அம்னோவிலிருந்து விலக்கப்பட, அவரும் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணைந்து இன்றுவரை போராடி வருகிறார்.Lim-Kit-Siang

இருப்பினும், இந்த எல்லாக் காலகட்டங்களிலும் ஜசெகவின் லிம் கிட் சியாங், கர்ப்பால் சிங் இருவரும் எதிர்க்கட்சித் தலைவர்களாக முன்னின்று எடுத்த அரசியல் செயல்பாடுகள் மலேசிய அரசியல் களத்தை செதுக்கின – செம்மைப்படுத்தின என்பதை மறுக்க முடியாது.

ஆனால், 2014-இல் நிகழ்ந்த கர்ப்பாலின் அகால மரணம், ஜசெகவில் ஒரு மாபெரும் வெற்றிடத்தை உருவாக்கியது. அவருக்குப் பதிலாக ஜசெகவில் உருவாகப் போகும் அடுத்த இந்தியத் தலைவர் யார் என்ற கேள்வியையும் எழுப்பியது.

இராமசாமியின் தோல்வியும, கோபிந்த் சிங்கின் வெற்றியும்!

Ramasamy-penang-deputy-cmகர்ப்பாலின் காலத்திலேயே கட்சிக்குள் கொண்டுவரப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் – சட்டமன்ற உறுப்பினர் – முதன் முறையாக 2008-இல் ஜசெக பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்றியபோது துணை முதல்வர் பதவி – பினாங்கு இந்து அறவாரியத் தலைவர் என அடுக்கடுக்காகப் பதவிகள் வழங்கப்பட்டவர் பேராசிரியர் இராமசாமி. ஜசெகவின் துணைப் பொதுச் செயலாளர் என்ற உயரிய அங்கீகார நியமனமும் அவருக்கு வழங்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் அவர்தான் கர்ப்பாலுக்கு அடுத்து ஜசெகவின் இந்திய முகமாக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஏனோ இராமசாமியால் ஜசெக கட்சி அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கும் கர்ப்பாலுக்கும் அவருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டது. ஒரு ஜசெக பொதுக் கூட்டத்தில் பகிரங்கமாக கர்ப்பால் இராமசாமியைச் சாடிய நிகழ்ச்சியும் அரங்கேறியது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சித் தேர்தலில் கூட இராமசாமி  தோல்வியடைந்தார். அதைத் தொடர்ந்து ஜசெகவில் 10 மத்திய செயலவை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டபோது கூட அவரது பெயர் அதில் ஒன்றாக இடம் பெறவில்லை.

இந்நிலையில், கர்ப்பாலின் மகன்களோ தொடர்ந்து ஜசெகவிலும், நாடாளுமன்றத்திலும், பினாங்கு சட்டமன்றத்திலும் தங்களின் அரசியல் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர்.

Lim_Guan_ENg_1010_sஞாயிற்றுக்கிழமை நடந்த ஜசெக கட்சித் தேர்தல் முடிவுகள், கர்ப்பாலின் இடத்தை நிரப்பப்போவது அவரது மகன் கோபிந்த் சிங்தான் என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கின்றன.

20 பேரைக் கொண்ட மத்திய செயலவைக்கான தேர்தலில் 1,198 வாக்குகள் பெற்று இரண்டாவதாக வெற்றி பெற்றிருப்பதன் மூலம், தனது தந்தையின் இடத்தை நிரப்பும் ஆற்றலும் அரசியல் ஆதரவும் தனக்கிருப்பதை நிரூபித்திருக்கிறார் கோபிந்த் சிங்.

முதலாவதாக வெற்றி பெற்ற லிம் கிட் சியாங்கை விட ஒரே ஒரு வாக்கு மட்டுமே கோபிந்த் குறைவாகப் பெற்றிருப்பதும், ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங்கை விட 18 வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருப்பதும் கட்சியில் கோபிந்த் சிங் பெற்றிருக்கும் செல்வாக்கை எடுத்துக் காட்டுகிறது என்பதோடு, அவரது தந்தைக்கு கட்சியினர் கடந்த காலங்களில் தந்த மரியாதையை தற்போது அவரது மகனான கோபிந்த் சிங்குக்குத் தரத் தொடங்கியுள்ளனர் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

DAP-LOGO-SLIDERதந்தையைப் போலவே உருவ ஒற்றுமை, மிடுக்கு, கம்பீரம், என வலம் வரும் கோபிந்த் சிங் டியோ, தந்தையின் பாதையில் வழக்கறிஞர் தொழிலிலும் பிரகாசித்து வருகிறார். கடந்த இரண்டு தவணைகளாக பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினராக, நாடாளுமன்றத்திலும் தனது ஆவேச உரைகளின் மூலம் முத்திரையைப் பதித்து வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற கோபிந்த் சிங் உடனடியாக கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தலைவராக டான் கோக் வாய் நியமிக்கப்பட்டிருக்கிறார். கர்ப்பால் சிங் அவரது காலத்தில் ஜசெக தலைவராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலகட்டத்தில் கர்ப்பால் தலைவராகவும், லிம் கிட் சியாங் பொதுச் செயலாளராகவும் ஜசெகவை வழிநடத்தி வந்தனர்.

அதேபோல, எதிர்வரும் காலங்களில் தற்போது பொதுச் செயலாளராக இருக்கும் கிட் சியாங்கின் மகன் லிம் குவான் எங் அதே பதவியில் தொடர, கட்சியின் தலைவராக கோபிந்த் சிங் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

-இரா.முத்தரசன்