கோலாலம்பூர் – பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தங்களது பிரதமர் வேட்பாளராக பெர்சாத்து கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவைத் தேர்வு செய்திருக்கிறது.
இதனிடையே, பக்காத்தானின் இந்தத் தேர்வுக்கு மறைந்த ஜசெக மூத்தத் தலைவர்களில் ஒருவரான கர்பால் சிங்கின் மகள் சங்கீத் கவுர் டியோ எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்.
கடந்த 1987-ம் ஆண்டு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் மறைந்த ஜசெக தலைவர் கர்பால் சிங்கும் ஒருவர்.
கடந்த 2014-ம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடையும் வரை, மகாதீரைக் கடுமையாக விமர்சித்து வந்தவர்களில் கர்ப்பால் சிங்கும் ஒருவர்.
இந்நிலையில், தனது தந்தை உயிரோடு இருந்திருந்தால், எதிர்க்கட்சியின் இம்முடிவிற்கு ஒப்புக் கொண்டிருக்கமாட்டார் என சங்கீத் கவுர் டியோ கூறியிருக்கிறார்.
நேற்று முன்தினம் இணையதளம் ஒன்றிற்குப் பேட்டியளித்த சங்கீத் கவுர் டியோ, பக்காத்தானின் இம்முடிவு எதிர்கட்சியில் தகுதிவாய்ந்த தலைவர் இல்லாததைக் காட்டுகிறது என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.