சென்னை – தினமணி நாளிதழ் ஏற்பாட்டில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்துவின் சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுள் என இரண்டுக்கும் உள்ள வித்தியாசம், ஆகியவை குறித்து வைரமுத்து விளக்கிய விதம் ஒரு தரப்பினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், தனது கருத்து குறித்து விளக்கமளித்திருக்கும் வைரமுத்து கூறியிருப்பதாவது:-
“தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து. ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர்.எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.” என கவிஞர் வைரமுத்து விளக்கமளித்திருக்கிறார்.