புதுடில்லி, மே 6 – கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக இருக்கிறது என்றும், இது போன்ற அணுமின் நிலையங்கள் நாட்டிற்கு தற்போதும், எதிர்காலத்திற்கும் அவசியம் என்றும் டில்லி உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளத்தில் இந்த அணு மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அணுசக்தி மூலம், 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவிற்கு திட்டமிடப்பட்டு, ரஷ்ய நாட்டின் உதவியுடன் இந்த அணு மின் நிலையம் அமைக்கப்பட்டது.
ஆனால் இதற்கு அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதில், கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது என்றும், மக்களின் தேவைக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் இத்திட்டம் மிக அவசியம் என்றும், அணுமின் நிலையங்கள் நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.