சென்னை,பிப்.1- விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சு நடத்த தயாராக இருக்கிறோம் என்று நடிகர்கள் தெரிவித்துள்ளனர்.
விஸ்வரூபம் பிரச்னை தொடர்பாக நடிகர், நடிகைகள் கமல்ஹாசன் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் சிவகுமார், ராதிகா, கார்த்திக், சூர்யா, பிரபு, மாதவன், பிரசன்னா, இயக்குனர்கள் பாலா, அமீர், கமலஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
50 வருடம் சினிமாவுக்காக தன்னை அர்ப்பணித்த கமலின் படத்துக்கு சிக்கல் வந்திருப்பதால் அதை தீர்க்க நாங்கள் அவர் பின்னால் திரண்டிருக்கிறோம். முதல்வரை சந்தித்து இதுகுறித்து பேச முடிவு செய்திருந்தோம்.ஆனால் முதல்வர், கமலும், முஸ்லிம் அமைப்புகளும் பேசி ஒரு முடிவுக்கு வந்தால் படத்தின் தடையை விலக்கி கொள்வதாக அறிவித்திருக்கிறார். இதை நாங்கள் வரவேற்கிறோம். பிரச்னைக்கு இது நல்ல தீர்வாக இருக்கும் என்று நம்புகிறோம்.
கமல் ஊரில் இல்லாததால் அவர் சார்பில் நாங்கள் முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சு நடத்த தயாராக இருக்கிறோம்.கமலுக்கு ஆதரவாக திரையுலகம் குரல் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்கிறோம். பிரச்னை கோர்ட்டில் இருந்ததால் அமைதி காத்தோம். பிரச்னை தீர்க்கப்பட்டு விரைவில் விஸ்வரூபம் வெளிவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் கூறியதாவது: விஸ்வரூபம் வெளியாகி உள்ள மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னைதான் காரணம். அரசியல் காரணம் எதுவும் இல்லை. பல முஸ்லிம் அமைப்புகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி நீக்கப்படும் காட்சிகளை முடிவு செய்திருக்கிறோம். தொடர்ந்து பேசி படத்தை விரைவில் வெளியிட முயற்சிப்போம்.
அரசு சுமுகமாக தீர்க்க கம்யூனிஸ்ட் கோரிக்கை
தா.பாண்டியன்:
சட்டம் ஒழுங்கு பிரச்னை எழாமல் தடுக்கவே விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதாக அரசு கூறுகிறது.சர்ச்சைக்குரிய காட்சிகளையும் உரையாடல்களையும் நீக்கிவிட்டு படத்தை வெளியிட தயாராக உள்ளதாக கமல் அறிவித்திருப்பதை ஏற்று, படத்தை வெளியிட தமிழக அரசு அனுமதித்து இந்த சர்ச்சைக்கு சுமுகத் தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உச்ச நீதிமன்றம் செல்ல விருப்பம் இல்லை: கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் நேற்று காலை 11.40 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
“விஸ்வரூபம் திரைப்படம் மும்பையில் வெளியாகிறது. அதில் கலந்து கொள்வதற்காக நான் அவசரமாக மும்பை புறப்பட்டுச் செல்கிறேன்.
என் நெஞ்சில் ஏற்பட்ட காயம் இன்னும் ஆறவில்லை. வேதனையுடன் தான் செல்கிறேன். தமிழக அரசின் மீது இன்னும் எனக்கு நம்பிக்கை உள்ளது. பிரச்னைகளை சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். எனக்கு உச்ச நீதிமன்றம் செல்ல விருப்பம் இல்லை. அதே நேரத்தில் எனக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் அதுபற்றி யோசித்து முடிவு எடுக்கப்படும்.