சென்னை,பிப்.1- சென்னை உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்களின் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வேணுகோபால் (படம்) நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ள புதிய முனையங்கள் திறக்காமல், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இங்கு மீண்டும் பயணிகள் நெரிசல் ஏற்படும். இதற்கு ஒரே தீர்வு ஸ்ரீபெரும்புதூரில் மற்றொரு புதிய விமான நிலையம் அமைப்பதுதான்.
இதுபற்றி மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் விரிவாக ஆய்வு செய்து அதற்கான நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கும்படி மாநில அரசிடம் அறிக்கை அளித்திருக்கிறது.
ஆனால், மாநில அரசிடம் இருந்து இதுவரை பதில் எதுவும் வரவில்லை. அதனால் தான் ஸ்ரீபெரும்புதூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணி தாமதமாகி வருகிறது.
புதிய உள்நாட்டு முனையத்துக்கு எம்ஜிஆர் பெயரை சூட்டவேண்டும் என்று முதல்வர் கோரியுள்ளாரே என்று கேட்டபோது, ‘கருத்து ஏதுமில்லை (நோ கமென்ட்)’ என்று கூறிவிட்டு சென்றார் மத்திய அமைச்சர்.