Home கலை உலகம் “கமலுக்கும், எனக்கும் தனிப்பட்ட பகை இல்லை வன்முறையை தடுக்கவே விஸ்வரூபத்துக்கு தடை’- ஜெயலலிதா

“கமலுக்கும், எனக்கும் தனிப்பட்ட பகை இல்லை வன்முறையை தடுக்கவே விஸ்வரூபத்துக்கு தடை’- ஜெயலலிதா

716
0
SHARE
Ad

jaya 1சென்னை, பிப்.1-“கமலுக்கும், எனக்கும் தனிப்பட்ட பகை இல்லை. விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிடுவதன் மூலம் தமிழகத்தில் சட்டம்,ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே, அப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது” என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

கமல்ஹாசன் நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளதை சிலர் அரசியலாக்குகிறார்கள். தொலைக்காட்சி ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் பலவிதமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தில் உள்ள பிரச்னையை முழுமையாக புரிந்து கொள்ளாமல் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக விளக்கம் அளிப்பது அவசியம் என்று கருதுகிறேன். சட்டம் , ஒழுங்கை பராமரிப்பது அரசின் கடமையாகும்.”

#TamilSchoolmychoice

“இப்படம் தொடர்பாக பல்வேறு முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த 24 பிரிவினர் அரசிடம் மனு கொடுத்து அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றனர். இதற்காக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினர். படம் திரையிடப்பட்டால் வன்முறை ஏற்படும் என்று உளவுத்துறை மூலம் அறியப்பட்டது”

“இதன் காரணமாகவே கலவரம் ஏற்படாமல் தடுப்பதற்காக, முன்னெச்சரிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பிரச்னையில் சில அரசியல் தலைவர்கள் தலையிட்டு தூண்டி விடுகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமே வன்முறை போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்பதால் கலெக்டர்கள் மூலம் 144 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாட்டில் கலவரம் ஏற்படாமல் தடுப்பது என்பது அரசு எந்திரங்களின் கடமையாகும். அந்த கடமையைத்தான் அதிகாரிகள் மேற்கொண்டனர்”

“தனியார் டி.வி.க்கு படத்தை விற்பதில் பிரச்னை என்றும் விமர்சனம் எழுந்தது. குறிப்பாக ஜெயா டி.வி.க்கு விற்பதில் பிரச்னை ஏற்பட்டதாக விமர்சிக்கப்பட்டது. ஜெயா டி.வி. என்பது அதிமுக ஆதரவு தொலைக்காட்சிதான். அந்த டி.வி.க்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதில் நான் பங்குதாரரும் இல்லை. ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் விஸ்வரூபம் படத்தை குறைந்த விலைக்கு கேட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.”

“மேலும் கமல்ஹாசனுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தனிப்பட்ட பகையும் எங்கள் இருவருக்கும் இல்லை. கமல் பற்றி எம்.ஜி.ஆருக்கு நான் கடிதம் எழுதியதாக கூறியுள்ளனர். கடிதம் எழுதும் நிலை எனக்கு வரவில்லை. காரணம் அப்போது நான் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் என்பதால், தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு அப்போது நாள்தோறும் செல்வேன். எம்.ஜி.ஆருடன் அமர்ந்து உணவு உண்ணுவேன். கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் கொடுக்கும் கடிதங்களை படிப்பேன். அவற்றின் மீது தேவையான நடவடிக்கைகள் எடுப்பேன். இப்படி நாள்தோறும் சந்தித்து பேசும் நிலையில் உள்ள நான், எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுத வேண்டிய தேவையும் இல்லை. அப்படிப்பட்ட நிலையும் எனக்கு வரவில்லை.”

கருணாநிதி அறிக்கைக்கு எதிராக அவதூறு வழக்கு தொடருவேன். அதை பிரசுரித்த பத்திரிகைகள் மீதும் சட்டரீதியாக வழக்கு தொடருவேன்.

24 முஸ்லிம் அமைப்புகள் சேர்ந்து ‘விஸ்வரூபம்’ படத்துக்கு தடை கேட்டு தலைமை செயலரிடம் மனு கொடுத்தனர். அந்த மனு உள்துறை செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு பிறகு இரு தரப்பினரும் படத்தை பார்க்கும் வகையில் திரையிட வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதற்கு கமல்ஹாசன் ஒத்துழைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சட்டம் , ஒழுங்கை பாதுகாத்து வன்முறையை தடுக்கும் வகையில் படத்துக்கு தடை விதிக்க முடிவு செய்தோம்.

ஆனால், ஒரு விழாவில் கமல் பேசும்போது, ‘வேட்டி கட்டிய தமிழர் ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்று பேசியதாகவும், அதனால்தான் இந்த படத்துக்கு தடை விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அது சரியல்ல. கமல் பேசியது அவரது கருத்து. நான் 30 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். கமலுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. கமல்ஹாசனால் சொல்லப்படுபவர்கள் ஒன்றும் பிரதமராகிவிடப் போவதில்லை.

விஸ்வரூபம் படத்தை தடை செய்வது குறித்த தனிப்பட்ட எண்ணம் எதுவும் அரசுக்கு கிடையாது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், வன்முறையை தடுக்கவுமே இப்படத்துக்கு தடை விதிக்க முடிவு செய்தோம். 1955 தமிழ்நாடு சினிமா ஒழுங்குமுறை சட்டம் பிரிவு 7,ன் படி ஒரு படத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அதை கையாளவில்லை. 144 சட்ட பிரிவின்கீழ் மட்டுமே தடை விதிக்கப்பட்டது. இப்போது இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் கட்டத்துக்கு வந்துள்ளோம்.

கமல் தனது எல்லா சொத்துகளையும் வைத்து ரூ.106 கோடி செலவிட்டு படத்தை தயாரித்ததாகவும், இப்படம் ஓடாவிட்டால், அவர் எல்லா சொத்தையும் இழந்து விடுவார் என்றும் கூறுகிறார்கள். அவர் தனது பொறுப்புடன் திட்டமிட்டு செயல்படவேண்டும். இவர் செய்யும் செயலுக்கெல்லாம் அரசு எப்படி பொறுப்பா கும். இப்போதெல்லாம் எனக்கு சினிமாவில் ஆர்வம் கிடையாது. படம் பார்க்கவும் எனக்கு நேரம் கிடையாது. அந்த படத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதும் எனக்கு தெரியாது.

இந்த படம் தமிழகத்தில் மட்டும் தடை செய்யவில்லை, அரபு நாடான கத்தாரில், சிங்கப்பூரில், ஸ்ரீலங்காவில், மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. கர்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு கலவரங்கள் நடந்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் அமைப்புகள் அவர்களுக்குள் பேசி சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்குவது குறித்தும், சமரச தீர்வு மேற்கொள்வதற்கும் இரு தரப்பினரும் ஒரு மனதாக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு அரசு ஒத்துழைப்பு கொடுக்கும். கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரத்துக்கு நான் தடையாக இருந்ததில்லை. இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.