Home வாழ் நலம் கிவி பழம்- சத்துப்பட்டியல்

கிவி பழம்- சத்துப்பட்டியல்

1162
0
SHARE
Ad

kiwi-fruit

கோலாலம்பூர், மே 11- கிவிப் பழத்திற்கு சீனத்து கள்ளிப்பழம் என்ற பெயரும் உண்டு.
உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின்கள், தாதுக்கள், ரசாயன மூலக்கூறுகள் நிறைந்தது கிவி. அதிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோமா..
கிவிப் பழத்தின் தாயகம் மேற்கு சீனப் பிரதேசமாகும். இது சீனாவின் தேசியக் கனி என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் அறிவியல் பெயர் அக்டினிடியா சைனிசிஸ். வெப்ப மண்டல கனி வகைகளில் இதுவும் ஒன்று.

#TamilSchoolmychoice

கிவிப் பழத்தின் சிறப்பம்சமே அதன் நார்ச்சத்துதான். எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள் இதில் ஏராளம் உள்ளன. 100 கிராம் பழத்தில் 3.8 கிராம் நார்ச்சத்து அடங்கி உள்ளது.

பழத்திலுள்ள நார்ப்பொருட்கள் மலச்சிக்கலை உடனே போக்கக் கூடியது. குடற்பகுதியில் புற்றுநோயை விளைவிக்கும் தீய ரசாயனங்களை அகற்றும் திறனும், குடற் புற்றுநோய்க்கு எதிர்ப்புத்தன்மையும் வழங்கக்கூடியது கிவிப் பழத்திலுள்ள நார்ப் பொருட்கள்.

‘வைட்டமின் சி’ கிவிப் பழத்தில் நிறைந்துள்ளது. தினசரி உடலில் சேர்க்கப்பட வேண்டிய டி.ஆர்.ஐ. அளவில் இது 154 சதவீதம் ‘வைட்டமின் சி’யைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் காப்பதில் ‘வைட்டமின் சி’க்கு குறிப்பிட்ட பங்கு உண்டு. தீங்கு தரும் பிரீ-ரேடிக்கல்களையும் விரட்டியடிக்கும்.

வைட்டமின் ஏ, வைட்டமின் இ, வைட்டமின் கே ஆகியன சிறந்த அளவில் உள்ளன. இவை சிறந்த நோய் எதிர்ப்பு பொருட்களாக செயலாற்றும். ‘வைட்டமின் கே’, எலும்புகளின் வலுவிற்கும், அவற்றின் உறுதியான செயல்பாட்டிற்கும் ஏற்றது. அல்சீமர் போன்ற உளநல பாதிப்பு சிகிச்சையிலும் ‘வைட்டமின் கே’ உதவுகிறது.

கிவி பழம் ரத்தத்தில் கட்டி ஏற்படுவதை தடுக்கும் ஆற்றல் கொண்டிருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது.

மேலும் மீன்களில் மட்டுமே காணப்படும் சிறப்பு பொருளான ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கிவிப் பழத்திலும் உள்ளது. இது கரோனரி இதய பாதிப்பு ஏற்படு வதை தடுக்கும் ஆற்றல் கொண்டது. பக்கவாதம், ஆட்டிசம் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் சில மனநல பாதிப்புகளில் இருந்து காக்க வல்லது கிவிப்பழம்.

இதய இயக்கத்திற்கு வலுசேர்க்கும் பொட்டாசியம் தாது, கிவிப் பழத்தில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பழத்தில் 312 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. உடற்செல்கள் வளவளப்புத் தன்மையுடன் இருப்பதற்கும், இதயத் துடிப்பை கட்டுக்குள் வைப்பதிலும், ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பொட்டாசியம் உதவுகிறது.

கிவிப் பழத்தில் மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுக்களும் குறிப்பிட்ட அளவில் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு நொதிகள் சிறப்பாக செயல்பட துணைக் காரணியாக செயல்படும். மக்னீசியம் கால் சியம்போல எலும்புகளுக்கு உறுதி தரும்.