மே 13 – ‘லேசான தொப்பை ஆண்களுக்கு அழகு’ என்று சிலர் பெருமையாகச் சொல்வார்கள். ஆனால், தொப்பையால் உடலுக்கு பிரச்னைகள்தான் ஏற்படுவதாக மருத்துவ உலகம் கூறுகிறது. இதய நோய்கள், மாரடைப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், பக்க வாதம் என நீளும் இந்தப் பட்டியலில் புற்றுநோய் இணையும் ஆபத்து கூட இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
தொப்பையைக் குறைக்க வேண்டுமானால் குனிந்து நிமிர்ந்து – உட்கார்ந்து எழுவது எல்லாம் பலன் தராது. அதிக நேரம் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் முதலியவை பலன் தரும். தவிர, கொழுப்பு குறைந்த உணவு வகைகளைச் சாப்பிட்டு, அதிக கலோரிகளைக் குறைக்க வேண்டும்.
சமீபத்திய ஆய்வுகளின்படி, அதிக உயரம் இருப்பவர்களை விடக் குள்ளமாக இருப்பவர்களுக்கே தொப்பை வருகிறதாம். அதோடு, தொப்பை விழுந்த பெண்களை விட ஆண்கள் விரைவாக அதைக் குறைத்துக் கொள்ள முடியுமாம்.
இதற்குக் காரணம் ஆண்களின் அடிவயிற்றுப் பகுதியில் அதிகச் சதையும் கொழுப்பில்லாத திசுக்களும் இருப்பது தான். தூங்கும்போதுகூட அவை வயிற்றுப் பகுதியிலுள்ள கொழுப்பை எரித்து சக்தியாக மாற்றும்.
அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்தால் தொப்பை விழுகிறது என்கிறார்கள். சும்மா உட்காரப் பிடிக்காமல் அந்த நேரத்தில் நொறுக்குத் தீனி தின்ன ஆரம்பிப்பதாலும் கொழுப்பு அதிகரித்து தொப்பை ஏற்படுகிறது.
பீர் போன்ற மது பானங்களைக் குடிப்பதால் நான்கில் ஒரு பங்கு கலோரிகள் தேவைக்கு அதிகமாக வயிற்றுப் பகுதியில் தொப்பையாக சேமிக்கப்படுகிறது என சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தொப்பை குறையக் குறைய கொழுப்புப் பொருட்களின் மீதுள்ள ஆர்வமும் குறையும் என்கிறார்கள் அவர்கள்.
ஒல்லியாக இருப்பவர்களை விட, தொப்பையோடு இருப்பவர்களுக்கு மூட்டுவலி, உயர் ரத்த அழுத்தம், கிருமித் தொற்றுகள், கை காலில் வாதம் தாக்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதோடு, ‘ஒல்லியானவர்களைவிட அவர்கள் பத்து வருடம் முன்னதாகவே இறந்து விடும் ஆபத்தும் அதிகம்’ என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
தொப்பை போட்டவர்களுக்கு மேலும் கொழுப்பு சேரும்போது, கண்புரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஹார்வார்டு பல்கலைக்கழக டாக்டர்கள் நடத்திய ஐந்து வருட ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது. உடல் பருமன் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைத் தூண்டி, சர்க்கரை நோய்க்கும் வழி ஏற்படுத்தித் தருகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.