மே 14 – தேர்தல் முறைகேடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நாடு முழுமையிலும் அன்வார் இப்ராகிம் தலைமையில் மக்கள் சந்திப்பு கூட்டங்களை “கறுப்பு 505” என்ற பெயரில் தற்போது மக்கள் கூட்டணி நடத்தி வருகின்றது.
இதற்கு அடுத்த கட்ட நடவடிக்கையாக குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தேசிய முன்னணி வென்றுள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளை அடையாளங் கண்டு, அந்த தேர்தல் செல்லாது என்று வழக்கு தொடுத்து அந்த தொகுதிகளில் எல்லாம் மீண்டும் மறுதேர்தல் நடத்தப்பட வைப்பதுதான் மக்கள் கூட்டணியின் வியூகமாகும்.
பொதுத் தேர்தல் முடிந்தவுடன் ஏதாவது தொகுதிகளில் முறைகேடுகள் நடந்ததாக சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடுத்தால் அதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைத்து அந்த வழக்குகளை 6 மாதத்திற்குள் விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கு சட்டம் வகை செய்கின்றது.
இருப்பினும், தோல்வியுற்றவர்கள் தேர்தல் குறித்து வழக்கு தொடுக்கும் போது நீதிமன்றங்களின் கண்ணோட்டத்தில் முக்கியமாகப் பார்க்கப்படுவது எத்தனை வாக்கு வித்தியாசத்தில் ஒருவர் தோல்வியுற்றார் என்பதைத்தான்.
குறுகிய வாக்கு வித்தியாசத்தில் ஒருவர் தோற்றிருந்தால் மட்டுமே நீதிமன்றங்கள் அவருடைய தேர்தல் வழக்கை சாதகமாக அணுகும்.
இதனைக் கருத்தில் கொண்டுதான் மக்கள் கூட்டணி தலைவர் அன்வார் இப்ராகிம், தேர்தல் முறைகேடுகள் மற்றும் அது தொடர்பான வழக்குகள் தொடுப்பது தொடர்பாக பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி தலைமையில் ஆய்வுக் குழுவை நியமித்துள்ளார்.
27 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ள ரபிசி குழு
ரபிசி தலைமையில் தேர்தல் முறைகேடுகளை ஆய்வு செய்து வரும் குழு இதுவரை 237 புகார்களைப் பெற்றிருப்பதாகவும், மக்கள் கூட்டணி குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்ட 27 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், ரபிசி அறிவித்துள்ளார்.
அடுத்த சில வாரங்களில் இந்த தொகுதிகளில் மறு தேர்தல் கோரி தேர்தல் வழக்கு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நடந்து முடிந்த 13வது பொதுத் தேர்தலில் பிகேஆர் 19 தொகுதிகளிலும், ஜசெக 2 தொகுதிகளிலும், பாஸ் 8 தொகுதிகளிலும் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவின.
வழக்குகள் தொடுத்து, இந்த தொகுதிகளில் முடிந்தவரை மறு தேர்தல் நடத்துவதில் வெற்றி கண்டால் அதன் மூலம் நாடாளுமன்றத்தில் தற்போது தேசிய முன்னணிக்கு இருக்கும் பெரும்பான்மையைக் குறைப்பதுதான் மக்கள் கூட்டணி தலைவர்களின் திட்டமாகும்.
“கறுப்பு 505” எழுச்சி அலை இடைத் தேர்தல்களில் துணை புரியும்
தற்போது நாடெங்கிலும் நடத்தப்பட்டு வரும் “கறுப்பு 505” மக்கள் சந்திப்பு கூட்டங்கள் எதிர்வரப் போகும் இந்த இடைத் தேர்தல்களுக்காக மக்களைத் தயார் படுத்துவதற்காகத்தான்.
இந்தக் கூட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் இடைத் தேர்தல்கள் நடத்தப்படும் போது அங்கு மக்கள் கூட்டணி மீண்டும் வெல்வதற்கான வாய்ப்பை உருவாக்குவதுதான் மக்கள் கூட்டணி தலைவர்களின் வியூகமாகும்.
சட்டமன்ற தொகுதிகளுக்கும் மறு தேர்தல்
தற்போது ரபிசி தலைமையிலான குழு நாடாளுமன்ற தொகுதிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஆய்வு செய்து வந்தாலும், சில சட்டமன்றத் தொகுதிகளிலும் மறு தேர்தலுக்காக வழக்குகள் தொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, பேராக் மாநிலத்தில் மூன்று தொகுதிகள் வித்தியாசத்திலேயே தேசிய முன்னணி ஆட்சி அமைத்திருப்பதால் இங்கு சில தொகுதிகளில் மறு தேர்தல் நடத்தப்பட்டால், அதில் மக்கள் கூட்டணி வென்றால், அதன் மூலம் தேசிய முன்னணியின் ஆட்சி பேராக் மாநிலத்தில் ஆட்டம் காணும்.
எனவே, மறு தேர்தல் நடத்த வாய்ப்புள்ள தொகுதிகள் மீது வழக்குகள் தொடுத்து அடுத்த 6 மாதங்களுக்குள்ளாக, நாட்டில் சில இடைத் தேர்தல்களை உருவாக்கி, அவற்றில் வெற்றி பெறுவதன் மூலம், மக்களின் ஆதரவை நாங்கள்தான் பெற்றிருக்கின்றோம் என்பதை நிரூபிப்பதோடு,
அதன் மூலம் நாடாளுமன்றத்தில் தேசிய முன்னணியின் பெரும்பான்மையை முடிந்த அளவுக்கு குறைப்பதுதான் மக்கள் கூட்டணியின் அடுத்த கட்ட வியூகமாகும்.
-இரா.முத்தரசன்