ஜோகூர் பாரு, மே 18 – புதிய அமைச்சரவையில் வேதமூர்த்தி நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக, எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கடுமையான விமர்சனங்களை விடுத்திருப்பதோடு, அவரை துணையமைச்சராக பிரதமர் நஜிப் தேர்ந்தெடுத்தது ஏன் ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த புதன்கிழமை இரவு ஜோகூர் மாநிலம் புத்ரி வாங்சாவில் நடைபெற்ற கறுப்பு 505 பேரணியில் பேசிய அன்வார் , “ வேதமூர்த்தி ஏற்கனவே மலேசிய அரசியலமைப்பின் சில அடிப்படைக் கொள்கைகளை ஏற்க மறுத்தவர் மற்றும் அவரது இயக்கம் பெர்க்காசா என்ற இனவாத இயக்கத்தின் இந்திய பதிப்பு” என்று தெரிவித்துள்ளார்.
“வேதமூர்த்தியை நியமனம் செய்ததற்குப் பதிலாக பிரதமர் நஜிப், கட்டாயமாக பங்களா தேசத்தை சேர்ந்த ஒருவருக்கு துணையமைச்சர் பதவி வழங்கியிருக்க வேண்டும் காரணம் பங்களா தேஷ் மற்றும் பிற வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தான் பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு வாக்களித்துள்ளனர்” என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.
மேலும் 13 ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் தான் உண்மையில் வெற்றி பெற்றது என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று கூறிய அன்வார், தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக தகுந்த ஆதாரங்களோடு மக்கள் கூட்டணியைச் சேர்ந்த அனைவரும் தொடர்ந்து போராட்டப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
“தேசிய முன்னணி 5 ஆண்டுகள் வரை ஆட்சி செய்வதற்கு கால அவகாசம் கொடுக்க மாட்டோம்” என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.