Home கருத்தாய்வு ம.இ.கா – வேதமூர்த்தி முட்டல்-மோதல் இப்போதே தொடங்கியது!

ம.இ.கா – வேதமூர்த்தி முட்டல்-மோதல் இப்போதே தொடங்கியது!

915
0
SHARE
Ad

Waytha-Sliderமே 18 பி.வேதமூர்த்தியின் துணையமைச்சர் நியமனம் நாடு முழுமையிலும் இந்தியர்களிடையே சலசலப்பையும், அதிருப்தியையும், எதிர்மறையான கருத்துக்களையும் ஏற்படுத்தி வருகின்றது.

வேதமூர்த்தியின் நியமனத்தால் ம.இ.கா.வின் முக்கியத்துவம் குறைந்து விட்டது என்பதோடு, இந்திய சமுதாயத்திற்கு தேவையானவற்றை தேசிய முன்னணி அரசாங்கத்தின் சார்பில் இனி செய்யப் போவது ம.இ.காவா அல்லது வேதமூர்த்தியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளுக்கு வெளியிலிருந்து ஓர் இந்தியரைக் கொண்டுவர வேண்டுமென்ற அவசியம் உள்ளதென்றார், மற்ற மலாய் சீன அமைச்சர்களைப் போல், பொருளாதாரத் துறையிலோ, கல்வித் துறையிலோ சிறந்த ஓர் இந்திய நிபுணரை நஜிப் நியமித்திருந்தால், ஒட்டுமொத்த இந்திய சமூகமும், நஜிப்பை பாராட்டு மழையில் குளிர்வித்திருக்கும்.

ம.இ.காவில் இருந்தும் இத்தனை சலசலப்புகளும், எதிர்ப்புகளும் புறப்பட்டிருக்காது.

மலாயன் வங்கியின் தலைமைச் செயல்முறை அதிகாரி வாஹிட் ஓமார் அல்லது இட்ரிஸ் ஜாலா போன்ற தொழில் துறை நிபுணத்துவம் கொண்ட ஓர் இந்தியர், அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தால், இந்திய சமுதாயமும், அத்தகைய ஒருவரை உச்சி மோந்து, உவகை கொண்டு வரவேற்றிருக்கும்.

அதை விடுத்து, வேதமூர்த்தி என்ற சர்ச்சைக்குரிய, சச்சரவுகளின் மூலகர்த்தாவை எந்த ஓர் அரசியல் பின்னணியும் இல்லாதவரை – வெளிநாடுகளில் மலேசியாவின் நற்பெயரைக் கெடுத்தவரை, நஜிப் நியமித்த காரணத்தால்தான் இந்திய சமுதாயத்திலும் ம.இ.கா போன்ற அரசியல் கட்சிகளிலும் இவ்வளவு கொந்தளிப்பும் குமுறலும் ஏற்பட்டிருக்கின்றது.

ம.இ.கா சார்பாக முதல் அம்பு – மோகன் விட்டார்

வேதமூர்த்தியின் நியமனம் அறிவிக்கப்பட்டவுடன் ம.இ.கா சார்பாக முதல் அம்பைத் துணிந்து தொடுத்தவர் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் டி.மோகன்.

வேதமூர்த்தியை விட தேசிய முன்னணியின் விசுவாசிகள் பலர் இருக்கின்றனர் என்றும் – ஐபிஎப் கட்சியினரை நியமித்திருந்தால் கூட பரவாயில்லை என்றும் கூறினார்.

வேதமூர்த்தியின் சகோதரர் உதயகுமாரும் வேதமூர்த்தியை புதிய மண்டோர் என வர்ணித்திருந்தார்.

அதற்கு பதிலடியாக ஹிண்ட்ராப்பின் ஆலோசகர் கணேசன் நேற்று விட்ட அறிக்கையில் மோகனும், உதயகுமாரும் வாயை மூடிக் கொண்டிருங்கள் இது பிரதமரின் நியமனம் என சாடியிருந்தார்.

பதிலுக்கு மோகனும் விடாப்பிடியாக கணேசனும், வேதமூர்த்தியும் பச்சோந்திகள், சமுதாயத்தைப் பற்றி பேசுவதற்கு அருகதை இல்லாதவர்கள் என்றும், போராட்ட காலத்தில் நாட்டை விட்டு ஓடிப் போனவர் வேதமூர்த்தி என்றும் குறை கூறியிருக்கின்றார்.

இப்படியாக, வேதமூர்த்தி தனது துணையமைச்சர் நாற்காலியில் அமர்ந்து அதனை சூடேற்றுவதற்கு முன்பாகவே, சூடான –  எதிர்மறையான அறிக்கை மழைகள் அவர் மீது பொழியத் தொடங்கிவிட்டன.

டாக்டர் சுப்ரமணியமும் வேதமூர்த்திக்கு அறிவுரை

இதற்கிடையில் ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியமும், வேதமூர்த்தி ம.இ.கா கொள்கைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும், ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கின்றார்.

அமைச்சரவை அமைக்கப்பட்டவுடன், இந்திய அமைச்சரவை உறுப்பினர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கிடையிலான முதல் காட்சியே சண்டைக் காட்சியாக அமைந்திருக்கின்றது.

இருப்பினும் இதுவரை வேதமூர்த்தி இந்த சச்சரவில் மூக்கை நுழைக்காமல் – சிக்காமல் இருப்பது அவரது அரசியல் முதிர்ச்சியையே காட்டுகின்றது.

இருப்பினும் இந்த மோதல்கள் பெரிதாகுமா – இவர்களின் சண்டையில் இந்திய சமுதாயத்திற்கு தேசிய முன்னணி அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கக் கூடிய சலுகைகளும், வாய்ப்புகளும் பறி போகுமா – பலி கொடுக்கப்படுமா என்பது இனி போகப் போகத்தான் தெரியும்.

வேதமூர்த்தியின் நியமனத்திற்கு இடம் கொடுத்ததே ம.இ.கா தான்!

இன்றைக்கு வேதமூர்த்தி இவ்வளவு தூரம் அரசாங்கத்தில் துணையமைச்சராக வளர்வதற்கு காரணமே ம.இ.கா.தான் என்பதையும் நாம் மறுக்க முடியாது.

இத்தனை காலமாக தேசிய முன்னணியில் இருந்தும், ம.இ.கா இதுவரை செய்யாமல் கோட்டை விட்ட அம்சங்கள் இன்னும் இருக்கின்றன என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, ஹிண்ட்ராப் சார்பாக வேதமூர்த்தி கொண்டு வந்த ஐந்தாண்டு வரைவுத் திட்டத்தை – புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற பெயரில் நஜிப்பும்-வேதமூர்த்தியும் கையெழுத்திட்ட போதே ம.இ.கா தனது எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும்.

தேசிய முன்னணியில் இந்தியர்களுக்கான கூட்டணி அரசியல் கட்சி என்று நாங்கள் இருக்கும் போது இன்னொரு இந்திய இயக்கத்துடன் ஏன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று தங்களின் எதிர்ப்பை அப்போதே ம.இ.கா காட்டியிருக்க வேண்டும்.

அப்படிச் செய்யாமல் விட்டதால்தான் இன்றைக்கு வேதமூர்த்திக்கு துணையமைச்சர் பதவி என்ற அளவுக்கு விவகாரம் வளர்ந்திருக்கின்றது.

அப்போது ஏதும் செய்யாமல், பேசாமல் இருந்த ம.இ.கா தலைமைத்துவம், இப்போது மட்டும் வேதமூர்த்தியின் நியமனத்தை எதிர்ப்பது ஏற்புடையதும் அல்ல!

நஜிப்பின் தலைமைத்துவ முடிவுக்கு கட்டுப்பட வேண்டும்.

தேசிய முன்னணி வெல்லவே முடியாது என்ற கணக்கெடுப்புகளுக்கு மத்தியில், இந்த 13வது பொதுத் தேர்தலில், தேசிய முன்னணி மீண்டும் வென்று மத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கான முக்கிய காரணம் நஜிப்பின் தலைமைத்துவம்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

எனவே, பிரதமர் என்ற முறையில் அவரது அரசியல் முடிவுகளுக்கும் தேசிய முன்னணி கூட்டணிக் கட்சிகளும் கட்டுப்பட்டே ஆகவேண்டும்.

வேதமூர்த்தியின் நியமனத்தை இனியும் குறை சொல்லிக் கொண்டு இருக்காமல், அவரும் என்னதான் செய்யப் போகிறார் என்பதையும்தான் பார்ப்போமே என்று ஒதுங்கியிருப்பதும் – அவரது நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து விட்டு அதன்பின் நமது கருத்துக்களைப் பதிவு செய்வதும்தான் முதிர்ச்சியான அரசியல் பண்பாக இருக்க முடியும்.

மற்ற ம.இ.கா தலைவர்களை விட வித்தியாசமாக, வேறு விதமாக, புதிய கண்ணோட்டத்தில் அவர் அரசியலைக் கையாளுகின்றாரா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அரசாங்கத்திற்கு எதிரான தனது முழக்கங்களை செயல்படுத்த – அந்த அரசாங்கத்திலேயே துணையமைச்சராக இருந்து செயலாற்ற – தனக்கு கிடைத்த வாய்ப்பினை எவ்வாறு அவர் பயன்படுத்திக் கொள்ளப் போகின்றார் என்பதை அவர் நிரூபிப்பதற்கு அவருக்கு ஒரு வாய்ப்பை நாம் வழங்க வேண்டும்.

அவர் அவ்வாறு திருப்திகரமாக செயல்படாவிட்டால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தனது திறமைகளைக் காட்டாவிட்டால் – இந்திய சமுதாயத்திற்கு செய்வேன் என்று வழங்கிய வாக்குறுதிகளை செயல்படுத்த முடியாவிட்டால் – அதன்பின்னர்தான் அவர் மீது குறை கூறல்களை வாரிக் கொட்டுவது பொருத்தமாக இருக்க முடியும்.

அதே வேளையில், வேதமூர்த்தியும், இனியும் ம.இ.காவையே குறை கூறிக் கொண்டிருக்காமல், இன்னும் பலம் வாய்ந்த அரசியல் கட்சியாகத் திகழும் அவர்களுடன் இணைந்து இந்திய சமுதாயத்தின் நலன் ஒன்றையே இலக்காக – குறிக்கோளாக வைத்து பாடுபட்டால், தனது துணையமைச்சர் பதவியைப் பயன்படுத்திக் கொண்டால், அதன் மூலம் அவரது பெருமையும் உயரும் – இந்திய சமுதாயமும் நிறைய பலனடையும்.

-இரா.முத்தரசன்