Home அரசியல் கெடாவில் அன்வார் இப்ராகிமின் “கறுப்பு பேரணி 505” – முக்ரிஸ் மகாதீர் தடை

கெடாவில் அன்வார் இப்ராகிமின் “கறுப்பு பேரணி 505” – முக்ரிஸ் மகாதீர் தடை

491
0
SHARE
Ad

Mukhriz-Mahathir---Sliderமே 19 – எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கெடா, அலோர்ஸ்டார் நகரில் உள்ள சுல்தான் அப்துல் ஹாலிம் அரங்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள “கறுப்பு பேரணி 505” தொடர் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்துவதற்கு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் (படம்) தடை விதித்துள்ளார்.

#TamilSchoolmychoice

யார் வேண்டுமானாலும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு உரிமை இருக்கிறது என்றாலும், அதற்கு அனுமதி வழங்குவதற்கு முன்னால் அந்த கூட்டத்தின் நோக்கம் ஆராயப்பட வேண்டும் என்று முக்ரிஸ் கூறியிருக்கின்றார்.

“நாட்டின் மற்ற பகுதிகளில் நடத்தப்பட்ட இதுபோன்ற பேரணிகளால், அதில் கலந்து கொள்பவர்களுக்கு மத்தியில் தேசிய முன்னணிக்கு எதிரான வெறுப்புணர்வு விதைக்கப்படுவதைத் தவிர இந்தக் கூட்டங்களால் வேறு எந்த பயனும் இல்லை. கெடாவையும் மத்திய அரசாங்கத்தையும் நடத்துவதற்கு தேசிய முன்னணிக்கு மக்கள் அதிகாரம் வழங்கியுள்ளார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது” என்றும்  முக்ரிஸ் மேலும் கூறினார்.

அவர்கள் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடத்தினால் அதைப் பற்றி பிரச்சனை ஏதும் இல்லை என்றும் ஆனால் நடத்தப்படும் பேரணியில் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களும், அவதூறுகளும்தான் பேசப்படும் என்றும் முக்ரிஸ் தெரிவித்திருக்கின்றார்.

இந்த பேரணி நடத்துவதற்கான விண்ணப்பத்தை சுல்தான் அப்துல் ஹாலிம் அரங்கம் ஏற்கனவே நிராகரித்துவிட்டது.

இதற்கிடையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கெடா பாஸ் தலைவர் மாபுஸ் ஓமார், கெடா அரங்கங்களை நிர்வகிக்கும் அமைப்பின் தலைவர் என்ற முறையில் கெடா மந்திரி பெசார் முக்ரிஸ், ஜனநாயக அடிப்படையில் இந்த பேரணிக்கு அனுமதி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அலோர்ஸ்டாரில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள கறுப்பு பேரணி 505 வேறு இடத்தில் நடைபெறுமா, அல்லது ரத்து செய்யப்படுமா என்பது இன்னும் அறிவிக்கபடவில்லை.