ராஜ்நந்த்கான், மே 19- சத்தீஸ்கரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு முதல் மந்திரி ராமன் சிங்கின் சட்டசபை தொகுதியில் நடந்த விகாஷ் யாத்ரா பிரச்சார பேரணியில் கலந்துகொண்டு குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி நேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இங்கு, 2003-ம் ஆண்டு தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றிப்பெற்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தாதுவளம் நிறைந்த இந்த மாநிலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. நாட்டில் கடந்த 50 வருடங்களாக வாக்கு வங்கி அரசியல் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் மேலும் அதை வளர்த்தார்கள். ஆனால் பாரதீய ஜனதா கட்சி மட்டுமே, முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு இந்த வாக்கு வங்கி அரசியலை எதிர்த்து வருகிறது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் பிரிந்தபோது, இரண்டையும் காங்கிரஸ் ஆண்டது.
ஆனால் அந்த மூன்று வருடங்களில் சத்தீஸ்கருக்கு எந்த முன்னேற்றமும் இல்லை. பின்னர் சத்தீஸ்கர் மக்கள் காங்கிரசை அங்கிருந்து விரட்டிய அடித்தனர். அதன் பிறகு சிறப்பான ஆட்சி நடத்தி வரும் ராமன் சிங்குக்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினர்.