ஐதராபாத், மே 18- ஸ்ருதிஹாசன் ‘3’ படத்துக்குப் பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. கடந்த வருடம் மார்ச் மாதம் இப்படம் வந்தது. தற்போது தெலுங்கில் பலுபு, ஏவடு, ராமய்யா வஸ்தாவையா, ரேஸ்குராம் என நான்கு படங்களில் நடிக்கிறார். இந்தியிலும் இரண்டு படங்களில் நடிக்கிறார்.
தமிழ் படங்களில் நடிக்க மறுப்பதாகவும் தெலுங்கு, இந்திப் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் பரவி உள்ளன. இதுகுறித்து ஸ்ருதிஹாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நான் தமிழ் படங்களில் இருந்து விலகி விட்டேன் என்பது முட்டாள் தனம். நடிகைகள் குறிப்பிட்ட மொழி படங்களில் மட்டுமே நடிப்பவர்கள் அல்ல. எல்லா மொழியிலும் நடிப்பவர்கள். கதாநாயகர்கள் ஒரு மொழியில் மட்டுமே நடித்துக் கொண்டு இருக்கலாம். ஆனால் நடிகைகள் எல்லா மொழிகளிலும், நடிப்பவர்கள்.
நான் தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். இதற்காக தமிழ் படங்களை விட்டுவிட்டேன் என்று சொல்ல முடியாது. அடுத்து தமிழ்படங்களிலும் நடிக்க வரலாம். எந்த மொழியில் நடித்தாலும் சிறந்த நடிகை என்று பெயர் எடுப்பதே முக்கியம். படங்கள் வெற்றி பெற்றால் உற்சாகம் தரும். தோல்வி அடைந்தால் பாடம் கற்பிக்கும். இரண்டும் வேண்டும். இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.