Home இந்தியா சென்னை திரும்பும் கமல் – இன்று மாலை முத்தரப்பு பேச்சுவார்த்தை

சென்னை திரும்பும் கமல் – இன்று மாலை முத்தரப்பு பேச்சுவார்த்தை

725
0
SHARE
Ad

Kamal-Vishwaroopam-sliderசென்னை, பிப்ரவரி 2 – ‘விஸ்வரூபம்’ படப் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தையில் கமல்ஹாசனும் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து முத்தரப்பு பேச்சு வார்த்தையில் பங்கேற்க கமல்ஹாசன் இன்று மும்பையில் இருந்து சென்னை திரும்புகிறார்.

தமிழக அரசு,  முஸ்லிம் பிரதிநிதிகள்  மற்றும் கமல் தரப்பினரின் முத்தரப்பு கூட்டம் இன்று மாலையில் நடக்கிறது.விஸ்வரூபம் படம் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்த வழக்கு எதிர்வரும் திங்கட்கிழமை பிப்ரவரி 4ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் இன்று பேச்சு வார்த்தை தொடங்கவிருக்கின்றது.

முஸ்லிம் அமைப்புகளுடன் பேசி கமல் சமரசம் செய்து கொண்டால் படத்தை வெளியிட அரசு உதவி செய்யும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், மும்பை, டெல்லி உள்பட வட மாநிலங்களில் ‘விஸ்வரூபம்‘ படம் நேற்று ரிலீஸ் ஆனது. இதற்காக கடந்த புதன்கிழமை இரவு கமல் மும்பை புறப்பட்டு சென்றார்.

இதற்கிடையில், முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை அடுத்து முஸ்லிம் அமைப்புகள் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தன. சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் ராஜகோபால் முன்னிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது.

கமல் தரப்பில் அவரது அண்ணன் சந்திரஹாசன், இயக்குனர் அமீர் பங்கேற்றனர். முஸ்லிம் அமைப்புகள் சார்பில் 15 பிரதிநிதிகள் பங்கேற்பதாக கூறினர். அரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் இடம் பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் கமல்ஹாசன் மும்பையில் இருந்ததால் அவர் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியவில்லை. அதனால், பேச்சுவார்த்தையில் கமல் பங்கேற்க வேண்டும் என்று முஸ்லிம் பிரதிநிதிகள் கூறினர். பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த தகவல் மும்பையில் உள்ள கமலுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கமல் இன்று மதியம் சென்னை திரும்புகிறார். அவர் வந்தவுடன் மாலை 6 மணி அளவில் முத்தரப்பினரின் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதில் சுமூக முடிவு ஏற்பட்டால் நாளை அல்லது திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் படம் வெளிவரும் என்று தெரிகிறது.