கோலாலம்பூர், மே 21 – ‘பபகொமோ’ என்ற வலைத்தளத்திற்கு தான் உரிமையாளர் இல்லை என்று ‘பபகொமோ’ என்ற வான் முகமட் அஸ்ரி (வயது 30) நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் போன்ற தோற்றமளிக்கும் ஒருவர், அடையாளம் தெரியாத பெண் ஒருவருடன் தகாத முறையில் உறவு கொள்வது போன்ற புகைப்படங்களும், காணொளியும் ‘பபகொமோ’ என்ற அம்னோ சார்பு வலைத்தளத்தில் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதனால் அவ்வலைத்தளத்தின் உரிமையாளர் பபகொமோ மீது கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி, எதிர்கட்சித் தலைவர் அன்வார் மானநஷ்ட வழக்கு பதிவு செய்து 100 மில்லியன் இழப்பீடு கோரினார்.
இவ்வழக்கு தொடர்பாக நேற்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், தான் பபகொமோ இல்லை என்றும், அன்வார் கொடுத்த ஆதாரங்களில் குறிப்பிட்டுள்ள தனது முகவரி சரியானது அல்ல என்றும் வான் முகமட் அஸ்ரி கூறியுள்ளார்.
அதோடு, அன்வாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தான் எந்த வித புகைப்படங்களையும் வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வழக்கு விசாரணையை நீதிபதி லீ ஹெங் சியாங், வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருப்பதாக அன்வாரின் வழக்கறிஞர் முகமட் அபிக் முகமட் நோர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.