கோலாலம்பூர் – பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவரை தாக்கிய குற்றத்திற்காக சர்ச்சைக்குரிய வலைப்பதிவாளர் பபகொமோவிற்கு கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் 4.300 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.
வான் மொகமட் அஸ்ரி வான் டெரிஸ் (வயது 33) என்ற பபகொமோ மீது நீதிபதி ஹஸ்னா சுல்கிள்பி முன்னிலையில் நேற்று மூன்று குற்றங்கள் சாட்டப்பட்டன.
கடந்த ஜனவரி 29-ம் தேதி, மதியம் 1.30 மணியளவில் வாங்சா மாஜுவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், குராம் சாஹத் என்ற பாகிஸ்தானி தொழிலாளியை முகத்தில் அறைந்தும், குத்தியும், காலால் உதைத்தும் துன்புறுத்தியதற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 323-ன் கீழ் பபகொமோ மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது.
அந்தத் தொழிலாளி பபகொமோவின் சகோதரிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்டதனால் தான் அவர் அவ்வாறு நடந்து கொண்டதாக பபகொமோ தரப்பில் வாதிப்பட்டாலும், சட்டத்தைக் கையில் எடுக்க பபகொமோவிற்கு உரிமை இல்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
எனவே, முதல் குற்றத்திற்கு 1000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை, இரண்டாவது குற்றத்திற்கு 1,500 ரிங்கிட் அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறைத் தண்டனை மற்றும் மூன்றாவது குற்றத்திற்கு 1,800 ரிங்கிட் அபராதம் அல்லது ஐந்து மாதங்கள் சிறைத் தண்டனை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் அபராதத் தொகையை செலுத்திவிட்டு வெளியே வந்த பபகொமோ செய்தியாளர்களிடம் பேசுகையில், தான் தொழிலாளரைத் துன்புறுத்தியிருக்கலாம் ஆனால் தனது தங்கைகளுக்காக அதைச் செய்ததை நினைத்து வருந்தப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.