மொசாம்பிக் – காணாமல் போன எம்எச் 370 மாஸ் விமானம் குறித்த மற்றொரு சுவாரசியமான தகவல் – படிக்க விறுவிறுப்பான நாவலின் ஒரு அத்தியாயம் போல் – நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. இந்தத் தகவல்படி, அந்த விமானத்தின் மற்றொரு உடைந்த பாகம் மொசாம்பிக் நாட்டின் கடற்கரையோரத்தில் அதிசயமான சூழ்நிலையில் இளைஞர் ஒருவரின் கையில் கிடைத்திருக்கின்றது.
தென்ஆப்பிரிக்க இளைஞர் எப்படிக் கண்டெடுத்தார்?
தான் கண்டெடுத்த உடைந்த விமானப் பாகத்துடன் லியாம் லோட்டர்….
கடந்த ஆண்டு, டிசம்பர் 30ஆம் தேதி லியாம் லோட்டர் என்ற 18 வயது தென் ஆப்பிரிக்க இளைஞன் ஒருவர் தனது குடும்பத்தினருடன் தென் மொசாம்பிக் பகுதிக்கு க்சாய் க்சாய் (Xai Xai) என்ற சுற்றுலா நகரின் கடற்கரையோரமாகச் சுற்றுலாப் பயணம் சென்றிருக்கின்றான்.
அப்போது, அங்கு கரையோரமாக ஒதுங்கிய சாம்பல் நிற விமானத்தின் உடைந்த பாகத்தைக் கண்டெடுத்து அதனை வீட்டுக்கு எடுத்துச் செல்ல விரும்பியிருக்கின்றான். ஆனால், அவன் பெற்றோர்களோ அது வெறும் குப்பை அதை ஏன் வீட்டுக்கு எடுத்து வருகின்றாய் எனத் தடுத்துள்ளனர்.
மேலும், கடல் நீரில் ஊறி, மிகவும் கனத்துக் கிடந்தது அந்தப் பாகம்! எனவே, அதனை மிகவும் கஷ்டப்பட்டுத்தான் அப்புறப்படுத்தியிருக்கின்றார் லியாம்.
லியாம் கண்டெடுத்த உடைந்த பாகத்தில் காணப்படும் – 676EB எழுத்துக்கள் கொண்ட முத்திரை…
ஆனாலும், அதில், 676EB என்ற எழுத்துக்களின் முத்திரை இருந்த காரணத்தால், அதில் ஏதோ ஒரு விசேஷம் இருக்கும் எனக் கருதி, தன்னால் கவரப்பட்ட, அந்தப் பாகத்தை குடும்பத்தினருடன் அடம் பிடித்து, தென் ஆப்பிரிக்காவில் உள்ள தனது இல்லத்திற்கு அந்த 18 வயது இளைஞர் கொண்டு சென்றிருக்கின்றான்.
அந்தப் பாகம் சுமார் ஒரு மீட்டர் நீளமும் (3.3 அடி) அதில் பாதில் அளவு அகலமும் கொண்டிருந்தது.
தென் ஆப்பிரிக்கா கொண்டு வரப்பட்டது!
தென் ஆப்பிரிக்காவில் உள்ள குவாசூலு-நட்டால் மாநிலத்தில் உள்ள வார்ட்பர்க் (Wartburg in KwaZulu-Natal province) என்ற ஊரில் உள்ள தனது இல்லத்தில், ஒரு மூலையில் அந்தப் பொருளை வைத்துவிட்டு, தனது பள்ளிப் படிப்புகளில் மூழ்கிப் போனான் லியாம்.
சில வேளைகளில் அவனது தாயார் அந்தப் பொருளை தூக்கி வீசவும் முயற்சி செய்திருக்கின்றார்.
மொசாம்பிக் செய்தியால் அதிசயித்த குடும்பத்தினர்
ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னால், மொசாம்பிக் கடற்கரையோரமாக காணாமல் போன எம்எச் 370 விமானத்தின் பாகம் கிடைத்தது என்ற செய்திகளைப் பார்த்தவுடன், லியாம் மற்றும் அவனது குடும்பத்தினரின் கவனமும் அந்த சிதைந்த பாகம் மீது திரும்பியது.
ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள மொசாம்பிக் நாடு…பக்கத்தில் தெரியும் மடகாஸ்கார் தீவுக்கு அருகில் உள்ள ரீயூனியன் தீவில்தான் ஏற்கனவே, எம்எச் 370 விமானத்தின் உடைந்த பாகம் கண்டெடுக்கப்பட்டது…
கண்டெக்கப்பட்ட பாகமும் தங்கள் வீட்டில் இருந்த மற்றொரு பாகமும் ஏறத்தாழ ஒத்த நிலையில் இருப்பதைக் கண்ட அவர்கள், உடனடியாக ஆஸ்திரேலியா அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.
இப்போது நினைத்துப் பார்த்தால் ஏதோ இனம் புரியாத காரணங்களுக்காக லியாம் அந்தப் பொருளின் மீது ஈர்ப்பு கொண்டு எடுத்து வந்திருக்கின்றான் என்கின்றனர் அவனது குடும்பத்தினர்.
மொசாம்பிக்கில் முதல் பாகம் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 186 மைல் தொலைவில் இந்த இரண்டாவது பாகத்தை லியாம் கண்டெடுத்திருக்கின்றான் என்பது மற்றொரு நம்ப முடியாத சுவாரசியமான தகவல்.
அந்த உடைந்த பாகத்தில் காணப்படும் எண் போயிங் 777 விமானத்தினுடையதுதான் என்பதை முதல் கட்டமாக உறுதிப்படுத்தியுள்ள ஆஸ்திரேலிய அதிகாரிகள், தற்போது தென் ஆப்பிரிக்க அரசு அதிகாரிகள் மூலமாக அந்தப் பாகத்தைப் பெற்று, நிபுணர்கள் மூலமாக, பரிசோதனைகள் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.
விமானத்தின் இறக்கைப் பகுதிபோல் காணப்படுகிறதாம் லியாம் கண்டெடுத்து வீட்டில் வைத்திருக்கும் உடைந்த பாகம்.
இதற்கிடையில் தென் ஆப்பிரிக்க பொதுப் போக்குவரத்து இலாகாவின் பேச்சாளர் ஒருவர் “அந்த உடைந்த பாகத்தை பெற்றுக் கொள்ள நாங்கள் ஏற்பாடுகள் செய்து வருகின்றோம். அதை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பவிருக்கின்றோம். காரணம், மலேசியாவால் ஆஸ்திரேலிய அதிகாரிகள்தான் உடைந்த பாகங்களை அந்த விமானத்தினுடையதுதானா என்பதை நிர்ணயிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து கூடிய விரைவில் மொசாம்பிக்கில் கிடைத்த இந்த இரண்டாவது பாகமும் காணாமல் போன எம்எச் 370 விமானத்தினுடையதுதான் என்பது உறுதிப்படுத்தப்படலாம்.
-செல்லியல் தொகுப்பு