Home நாடு எம்.எச்.370 – காணாமல் போன விமானம் – தேடும் முயற்சிகள் மீண்டும் தொடக்கம்! இந்த முறை...

எம்.எச்.370 – காணாமல் போன விமானம் – தேடும் முயற்சிகள் மீண்டும் தொடக்கம்! இந்த முறை தடயங்கள் சிக்குமா?

175
0
SHARE
Ad

கோலாலம்பூர்: காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் (மாஸ்) விமானம் எம்எச் 370-ஐ தேடும் முயற்சிகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன. ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் தென் இந்தியப் பெருங்கடலில் 15,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மேற்கொள்ளவுள்ள புதிய தேடுதல் முயற்சி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு காணாமல் போன விமானத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையை அந்த விமானத்தில் இருந்த பயணிகளின் குடும்பத்தினர் கொண்டுள்ளனர்.

2018-இல் முதல் தேடல் முயற்சி பலனளிக்கவில்லை என்றாலும், ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட தேடல் முயற்சிக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு பயணிகளின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

“2018-இல் கடைசித் தேடல் முடிவடைந்த பிறகு, புதிய தேடலுக்காக நீண்ட காலமாக காத்திருந்தோம். வாரிசுகளாக, இந்தத் தேடல்தான் கடைசியாக இருக்கும் என்று நம்புகிறோம்; இம்முறை எம்எச் 370 கண்டுபிடிக்கப்படும் என்று உண்மையிலேயே நம்புகிறோம்” என பயணிகளின் குடும்ப உறுப்பினர்களைப் பிரதிநிதித்த கிரேஸ் சுபத்திரை நாதன் என்பவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், டிசம்பர் 13 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், கடல்சார் ரோபோட்டிக்ஸ் நிறுவனமான ஓஷன் இன்ஃபினிட்டியின் எம்எச்370 இடிபாடுகளைத் தேடும் முயற்சியை தொடர்வதற்கான முன்மொழிவை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.

நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் சமீபத்திய தகவல்கள் மற்றும் தரவு பகுப்பாய்வின் அடிப்படையில், கடல் தள தேடல் நடவடிக்கை தென் இந்தியப் பெருங்கடலில் சுமார் 15,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் புதிய இடத்தில் கவனம் செலுத்தும் என லோக் கூறினார்.

சுப்ரமணியம் குருசாமி (70) என்பவர் தனது குடும்பத்தை ஆழமாகப் பாதித்த பேரழிவுக்குப் பிறகு தனக்கும் தனது மனைவிக்கும் தேவையான முடிவை கொண்டுவரும் வகையில் ஓஷன் இன்ஃபினிட்டியின் தேடல் இடிபாடுகளைக் கண்டுபிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

“பத்து ஆண்டுகளுக்கு முன்பு எம்எச்370-இல் பயணித்தவர்களில் ஒருவர் எஸ். புஷ்பநாதன் என்ற எங்களது ஒரே மகன். எம்எச்370 கண்டுபிடிக்கப்பட்டால், எங்கள் குடும்பத்தை பெரிதும் பாதித்த பேரழிவுக்கான பதில்கள் கிடைக்கும்” என சுப்ரமணியம் மேலும் தெரிவித்தார்.

227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் மார்ச் 8, 2014 அன்று கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு செல்லும் வழியில் எம்எச்370 விமானம் மறைந்தது.

2018 ஜனவரியில், மலேசியா, உயர் தெளிவுத்திறன் கடல்தள தரவுகளை சேகரிப்பதில் சிறப்பு பெற்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஓஷன் இன்ஃபினிட்டியுடன் தென் இந்தியப் பெருங்கடலில் எம்எச்370க்கான புதிய தேடலைத் தொடங்க ஒப்பந்தம் செய்தது.

112,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான கடல் தளப் பகுதியிலிருந்து உயர்தர தரவுகளைத் தேடி சேகரித்த பிறகு, மே 29, 2018 அன்று நிறுவனம் தனது தேடலை முடித்தது. தற்போது இந்தத் தேடல் மீண்டும் தொடங்குகிறது.