இந்திய சமூகத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் நிதி ஒதுக்கீடுகள் போதுமானதாக இல்லை என நிலவும் அதிருப்தி குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அன்வார், இனியும் அரசாங்கத் திட்டங்களை இன ரீதியாகப் பிரித்துப் பார்க்கும் போக்கு தொடர வேண்டியதில்லை என வலியுறுத்தினார். ஏழ்மையை ஒழிக்கும் அரசாங்கத் திட்டங்களிலும், மக்கள் நலன் பயக்கும் திட்டங்களிலும் இனியும் இனரீதியாகப் பிரித்துப் பார்க்கும் நடைமுறையை அரசாங்கம் கடைப்பிடிக்காது என வலியுறுத்திய பிரதமர், ஏழ்மையை ஒழிப்பதில் இந்தியர்கள் என்றோ, மற்ற இனங்கள் என்றோ தாம் எப்போதும் பிரித்துப் பார்க்கப் போவதில்லை என உறுதிபடத் தெரிவித்தார்.
துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் மூலமாகவும் அவரின் அமைச்சு மூலமாகவும் இந்தியர்களுக்கான பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
குறிப்பாக ஏழ்மை ஒழிப்பதில் அரசாங்கம் இன ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ பாகுபாடு காட்டுவதில்லை. சபா, சரவாக் மாநிலங்களிலும் ஏழைகள் இருக்கிறார்கள். மேற்கு மலேசியாவிலும் ஏழ்மை நிலையில் இந்திய சமூகத்தினர் பலர் இருக்கிறார்கள், மலாய் சமூகத்திலும் ஏழைகள் இருக்கிறார்கள் என்று கூறிய அன்வார், ஏழ்மையை ஒழிப்பதில் அவர்கள் யாராக இருந்தாலும் தான் பாகுபாடு காட்டியதில்லை – அனைத்து சமூகங்களையும் அரசாங்கம் சரி சமமாகத்தான் பார்க்கிறது – என்றும் வலியுறுத்தினார்.
“எல்லா இனங்களிடமிருந்தும், எல்லா மாநிலங்களிடமிருந்தும் கோரிக்கைகள் வருகின்றன. அவற்றை நான் வரவேற்கிறேன். அப்போதுதான் பிரச்சனைகளையும் தேவைகளையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். ஆனால் எல்லாவற்றையும் தீர்த்து விட முடியாது. அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதில் நாம் தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளில் எவ்வளவோ சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறோம். அதனைப் பாராட்டாமல் எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்துக்காக குறைகளையே சுட்டிக் காட்டுகின்றன” என்றும் அன்வார் சாடினார்.