Home நாடு ரமணன், அரசாங்கத்தின் சார்பில் 90 முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 3.17 மில்லியன் வழங்கினார்!

ரமணன், அரசாங்கத்தின் சார்பில் 90 முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 3.17 மில்லியன் வழங்கினார்!

61
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அரசாங்கம் 90 முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 3.17 மில்லியன் ரிங்கிட் சிறப்பு உதவித் தொகையை வழங்கியுள்ளது. இந்த உதவித் தொகையை அரசாங்கத்தின் சார்பில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் அரசாங்கத்தின் சார்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வழங்கினார். நாடு முழுவதும் உள்ள 89 கோவில்கள் மற்றும் ஒரு தேவாலயத்தின் பிரதிநிதிகளிடம் இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது.

கோவில்கள் அல்லது தேவாலயங்களை புதுப்பிக்க அல்ல, மாறாக சிறப்பு வகுப்புகள் அல்லது மத வகுப்புகள் நடத்துதல் போன்ற முயற்சிகள் உட்பட மக்களுக்கு உதவும் திட்டங்களை நடத்துவதற்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரமணன் தெரிவித்தார்.

“இது நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒதுக்கீடு, பிரதமரால் அங்கீகரிக்கப்பட்டது, இந்திய சமூகத்திற்கான அவரது அர்ப்பணிப்பை இது காட்டுகிறது,” என்று அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) பிரிக்ஃபீல்ட்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூறினார்.

#TamilSchoolmychoice

பிரதமர் நாட்டின் இந்திய சமூகத்தை புறக்கணிக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளை இந்த உதவி பொய்யாக்குவதாக ரமணன் மேலும் தெரிவித்தார்.

இந்திய சமூகத்தின் நலனில் எப்போதும் தீவிர ஆர்வம் காட்டி, அதன் தலைவர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற அடிக்கடி பிரதமர் வலியுறுத்துவதாக ரமணன் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய டத்தோஸ்ரீ ரமணனின் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன்

“பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும். மக்கள் பயனடைய வேண்டும். அன்வாரை மேடையில் எப்போதும் பார்க்க முடியாவிட்டாலும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்ற பிரதிநிதிகள் உட்பட அனைவரும், பிரதமரால் எங்களுக்கு வழங்கப்பட்ட வேலை மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றி வருகிறோம்,” என்றும் ரமணன் தெரிவித்தார்.

அன்வாரின் நிர்வாகத்தின் கடந்த இரண்டு ஆண்டுகளில், மலேசிய இந்திய மாற்ற உருமாற்றப் பிரிவின் (Mitra) கீழ் 275 முயற்சிகளை உள்ளடக்கி, சமூகத்தின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களுக்காக சுமார் 300 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக ரமணன் கூறினார்.

நவம்பர் 2022-இல் மதானி அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து, இந்திய சமூகத்தின் நலன் மற்றும் நல்வாழ்வுக்காக மித்ரா 2023-இல் தனது ஒதுக்கீட்டில் 100% மற்றும் 2024இல் 98.9 சதவீதத்தை பயன்படுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

“2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில், முந்தைய அரசாங்கங்கள் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கான ஒதுக்கீட்டில் பெரும் பகுதியை ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்காமல் விட்டது. அதுபோல் இல்லாமல் முழு நிதி ஒதுக்கீடுகளையும் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்” என்று கூறிய அவர் “மேலும் ஒற்றுமை அரசாங்கம் தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் இந்திய சமூகத்திற்கு கூடுதலாக 136 மில்லியன் ரிங்கிட் வழங்கியுள்ளது, இது இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மேலும் பிரதிபலிக்கிறது” என்றும் தொடர்ந்து குறிப்பிட்டார்.

கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 21) ஊடகங்களின் ஆசிரியர்களோடு நடத்திய சந்திப்பின்போது பிரதமர் அன்வார், நாட்டில் கடுமையான வறுமையை ஒழிக்கும் முயற்சிகள் உட்பட உதவிகளின் விநியோகத்தில் இன அடிப்படையிலான எந்தவொரு விவரிப்பையும் இனியும் தொடரக் கூடாது – முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் – என்றும் அன்வார் வலியுறுத்தியிருந்தார்.