கோலாலம்பூர், மே 22 – பொதுத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக நாடெங்கிலும் மக்கள் கூட்டணி நடத்தி வரும் கறுப்பு பேரணி குறித்து கருத்துரைத்துள்ள முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்,
“தேர்தலின் மூலம் மட்டுமே அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க முடியும். வீதிகளில் ஆர்பாட்டம் செய்வதால் அல்ல. அப்படி வீதிகளில் ஆர்பாட்டம் செய்வதால் ஒரு அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படும் என்றால் மோசடிகளுக்கு அங்கு வேலையில்லை” என்று தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் “இது போன்ற வீதி ஆர்பாட்டங்களின் மூலம் ஒரு அரசாங்கத்தை வீழ்த்தினால், வீழ்ந்தவர்களும் அதே போன்ற ஒரு முறையைப் பயன்படுத்துவர்.
இதனால் நாட்டில் எப்போதும் குழப்பங்களும், பிரச்சனைகளும் தான் நிலவும்.
இதனால் நாட்டின்வளர்ச்சி தடைபட்டு, வறுமை பெருகி அண்டை நாடுகளில் கையேந்தும் நிலை வரும், முடிவில் நாட்டின் சுதந்திரம் பறிப்போகும் ” என்றும் மகாதீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “தோற்றவர்கள் எப்போதுமே வெற்றி பெற்றவர்களை ஏமாற்றிவிட்டதாகத் தான் கூறுவார்கள்.
அது போல் தான் எதிர்கட்சியினரும் தேர்தலில் தோற்றதால் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுக்கிறார்கள்.
இது போன்ற அரசாங்கத்துக்கு எதிரான பேரணிகளை நடத்தி ஆட்சியைக் கவிழ்த்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களை காவல்துறையால் எதுவும் செய்ய இயலாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
அப்படி காவல்துறையினர் அவர்களை அடக்க முயன்றால் வன்முறையில் இறங்குவார்கள்.
அவர்களுடன் மோத காவல்துறையும் வன்முறையைக் கையில் எடுத்தால் ‘காவல்துறையினர் அராஜகம்’ என்று அப்போதும் அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் திசை திருப்ப முயற்சிப்பார்கள்.
இப்படி காவல்துறையினர் தங்களது கடமையைச் செய்ய இயலாததால், குற்றவாளிகளுக்கு அது மேலும் பலம் சேர்த்துவிடுகிறது” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.