கோலாலம்பூர், மே 23 – மாணவப் போராட்டவாதியான அடாம் அட்லி தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியதற்காக அவர் மீது தேச நிந்தனைக் குற்றாச்சாட்டு சுமத்தப்பட்டு இன்று நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
இவ்வழக்கில் அடாம் அட்லி சார்பாக பெர்சே இயக்கத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனும், பிகேஆர் உதவித்தலைவர் என்.சுரேந்திரனும் ஆஜரானார்கள்.
அடாம் அலி அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் என்று பொதுமக்களைத் தூண்டும் வகையில் போராட்டம் நடத்தினார் என்று அவர் மீது தேச நிந்தனைச் சட்டம் 4(1) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நோர்ஷரிடா ஆவாங், அடாம் அட்லியை 5000 ரிங்கிட் பிணைத் தொகையில் விடுவித்து இவ்வழக்கை வரும் ஜூலை மாதம் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அடாம் அலி சார்பாக, இவ்வழக்கை தள்ளுபடி செய்யுமாறு எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேச நிந்தனை குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுபவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனையும், 5000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.