கோலாலம்பூர்: பிடிபிடிஎன் (PTPTN) கடன் உதவி குறித்த எந்தவொரு தீர்மானத்தையும் அறிவிப்பதற்கு முன்னதாக பொதுமக்களிடம் பேசி முடிவெடுப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர் அடாம் அட்லீ கூறியுள்ளார்.
இதுவரை இது குறித்த போராட்டங்களில் பங்கெடுத்த அடாம், பிடிபிடிஎன்னிடமிருந்து கடன் பெற்ற மாணவர்களுக்கும் அந்நிறுவத்திற்கும் சுமுகமான சூழல் ஏற்பட அது வழிவகுக்கும் என அவர் கூறினார்.
அரசாங்கம் அமைத்ததிலிருந்து நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம், பிடிபிடிஎன் கடன் உதவியை திரும்பக் கோரும் தகவலில் பல மாற்றங்களை செய்துள்ளதை அவர் குறிப்பிட்டார். இவ்வாறான சூழல் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது தவறான தாக்கத்தை ஏற்படுத்தி விடும் எனவும் அவர் நினைவுப் படுத்தினார்.
மேலும் கூறிய அடாம், கடன் பெற்றவர்கள் நிறைய சம்பாத்தியம் பெறுகிறார்கள் எனும் பட்சத்தில், அவர்களின் வருமானத்திலிருந்து அதிக விழுக்காடு பணத்தை பெற நினைப்பது சரியானது அல்ல என்றார்.
தற்போதைய சூழலில், அரசாங்கம் கடன் பெற்றவர்களை காப்பாற்ற திட்டங்களை தீட்டுகிறதா, அல்லது, அவர்களை காப்பாற்றிக் கொள்ள திட்டங்களை தீட்டுகிறதா எனும் கேள்வியும் எழுகிறது என அடாம் பிரி மலேசியா டுடே இணைய ஊடகத்திடம் கூறினார்.