மே 23 – மாணவர் போராட்டவாதியான அடாம் அட்லி அப்துல் ஹாலிம் (படம்) தேச நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.
இதனை இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் துறையின் விசாரணை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளதாக அவரது வழக்கறிஞர் என்.சுரேந்திரன் கூறியுள்ளார்.
கடந்த மே 13ஆம் தேதி நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய 24 வயதான அடாம் அட்லி, பொதுத் தேர்தல் முறைகேடுகளுக்காக பொதுமக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென பேசியுள்ளார்.
இதற்காக அவர் காவல் துறையினரால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டு, தேச நிந்தனை சட்டம் பிரிவு 4இன் கீழ் விசாரிக்கப்பட்டு வந்தார்.
இந்த சட்டத்தின்படி அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், கூடிய பட்சம் 3 வருட சிறைத் தண்டனையோ அல்லது கூடிய பட்சம் 5,000 ரிங்கிட் அபராதமோ விதிக்கப்படுவார்.
அவர் குற்றவியல் சட்டம் பிரிவு 124இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அடாம் அட்லியின் பேச்சு குறித்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய காவல் துறையினர், தேசிய முன்னணி தலைவர்களோ அல்லது அதனைச் சார்ந்தவர்களோ இதே போன்று பேசும் போது எந்தவித நடவடிக்கையிலும் இறங்குவதில்லை என குற்றம் சாட்டி வருகின்றனர்.
அடாம் அட்லி கைது செய்யப்பட்டது முதல் அவருக்கு ஆதரவான குரல்கள் நாடு முழுமையிலும் எதிரொலித்து வருகின்றன.
அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜிஞ்சாங் காவல் துறை நிலையத்தில் நாள்தோறும் இரவில் மனித உரிமை ஆர்வலர்கள் ஒன்று கூடி அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அடாம் அட்லி விடுதலை செய்யப்பட வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.