மே 24 – இந்தியர் விவகாரங்களுக்கான பிரதமரின் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றி வந்த டத்தோ ரவின் பொன்னையா தனது முனைவர் (டாக்டர்) பட்டத்துக்கான ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர்வதற்காக பிரிட்டன் செல்வதாகவும் அதனால்தான் தனது பதவியிலிருந்து விலகுவதாகவும் பத்திரிக்கைச் செய்தி ஒன்று கூறுகின்றது.
எதிர்வரும் மே 28ஆம் தேதியோடு தனது பதவியிலிருந்து விலகும் ரவின் பொன்னையா, பிரிட்டனிலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தனது உயர் கல்வியைத் தொடரவுள்ளார்.
2004ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் அப்துல்லா அகமட் படாவியின் அலுவலகத்தில் இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக பதவியேற்ற ரவின், பின்னர் அப்துல்லா படாவி பதவி விலகியவுடன் தானும் விலகினார்.
சிறிது காலம், தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய ரவின் மீண்டும் பிரதமர் நஜிப்பின் கீழ் இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்திய விவகாரங்களுக்கான புதிய சிறப்பு அதிகாரி சிவமுருகன் பாண்டியன்?
இதற்கிடையில் இந்தியர் விவகாரங்களுக்கான பிரதமரின் புதிய சிறப்பு அதிகாரியாக நாட்டில் அரசியல் ஆய்வாளர்களில் ஒருவரும், பல்கலைக் கழக விரிவுரையாளருமான சிவமுருகன் பாண்டியன் நியமிக்கப்படுவார் என்றும் மற்றொரு பத்திரிக்கைச் செய்தி கூறுகின்றது.