Home அரசியல் “தொடர் கைதுகளால் எங்களின் போராட்டம் சோர்வடையாது” – அன்வார் சூளுரை

“தொடர் கைதுகளால் எங்களின் போராட்டம் சோர்வடையாது” – அன்வார் சூளுரை

504
0
SHARE
Ad

MALAYSIA-OPPOSITION-ANWAR-TRIALமே 24 – தேர்தல் முறைகேடுகளை முன் வைத்து நாடு முழுமையிலும் கறுப்பு 505 பேரணிகளை முன் நின்று அன்வார் இப்ராகிம் மக்கள் கூட்டணி நடத்திக் கொண்டிருக்க, இன்னொரு புறத்தில் தேச நிந்தனைக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி காவல் துறையினர் மக்கள் கூட்டணி சார்புடைய முக்கிய புள்ளிகளைக் கைது செய்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் நேற்று திரெங்கானுவில் உள்ள குவாலா இபாய் என்ற இடத்தில் நடைபெற்ற கறுப்பு பேரணி 505 மக்கள்  சந்திப்புக் கூட்டத்தில் பேசிய எதிர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இந்த கைதுகளால் தாங்கள் சோர்வடையப் போவதில்லை என்றும் மக்களின் ஆதரவு இருக்கும் வரை எங்களின் போராட்டம் ஓயாமல் தொடரும் என்றும் சூளுரைத்துள்ளார்.

“எங்களின் மீதான அடக்குமுறை நடவடிக்கைகள் ஆரம்பித்துவிட்டன. அவர்களின் இறுதி இலக்கு யார் என்று உங்களுக்கும் தெரியும். இதன் மூலம் என்னை பயமுறுத்தலாம் என பிரதமர் நஜிப்போ, உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட்டோ நினைத்தால், அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கின்றேன். மக்களின் ஆதரவு இருக்கும்வரை எனக்கு எந்தவித அச்சமும் இல்லை” என்றும் அன்வார் இந்தக் கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினார்.

சுமார் 20,000 மேற்பட்ட பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு மற்றும் உதவித் தலைவர் ஹூசாம் மூசாவும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதாக இருந்த பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா கைது செய்யப்பட்டதால் அவரால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.

திரெங்கானுவிற்கு விமானம் ஏறும் தருணத்தில் சிப்பாங்கிலுள்ள மலிவுக் கட்டண விமான நிலையத்தில் தியான் சுவா கைது செய்யப்பட்டார்.

மலேசியக் காவல் துறையின் புதிய தலைவராக காலிட் அபு பாக்கார் பொறுப்பேற்றவுடன் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மக்கள் கூட்டணி சார்புடைய 6 முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.