புத்ரா ஜெயா, மே 23 – இன்று பாக்கத்தானைச் சேர்ந்த தலைவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டதில் தனது பங்கு எதுவும் இல்லை என்றும், அது சட்டப்படி காவல்துறையினர் எடுத்த முடிவு என்றும் உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
“உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டேன். வலுவான ஆதாரங்கள் உள்ளதால் தான் காவல்துறையினர் இந்நடவடிக்கையை எடுத்துள்ளனர் என்பதை மட்டும் உறுதி கூறிக்கொள்கிறேன். மற்றபடி இந்த கைது நடவடிக்கை எனது கைகளில் இல்லை” என்று புத்ரா ஜெயாவில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மற்றும் ஏபியு (Anything but Umno) தலைவர் ஹரீஸ் இப்ராகிம் ஆகிய இருவரும் இன்று மதியம் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். அவர்களையடுத்து பத்து பெரண்டாம் நாடாளுமன்ற உறுப்பினரான பாஸ் கட்சியைச் சேர்ந்த தம்ரின் கப்பாரும் பங்சாரில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இவர்கள் மூவரும் மே 13 ஆம் தேதி நடந்த தேர்தல் முறைகேடுகள் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராகப் பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் மீது தேச நிந்தனைச் சட்டம் 4(1) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.