இது குறித்து யாஸிட்டின் மனைவி சோமால் முகமட் கூறுகையில், “இன்று காலை 8 மணியளவில் வீட்டுக்குள் நுழைந்த காவல்துறையினர் எனது கணவரைக் கைது செய்துள்ளனர். அப்போது நான் வீட்டில் இல்லை. எனது நான்கு பிள்ளைகளும் காவல்துறையிடம் கைது குறித்து கேட்டபோது புக்கிட் அமானுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளனர். எனது கணவர் விடுதலையாகி வந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்குள் மீண்டும் அவரை கைது செய்துள்ளது ஏன் என்று புரியவில்லை” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
யாஸிட்டும், அவரது மனைவியும் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்திற்கு (ஐ.எஸ்.ஏ) பதிலாக கொண்டுவரப்பட்ட சொஸ்மாவின் கீழ் யாஸிட் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டு பின் மே 20 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.
இதற்கு முன்பு யாஸிட் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறை பிடிக்கப்பட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.