Home அரசியல் “துன் சம்பந்தனாரை விமர்சிக்க வேதமூர்த்திக்கு அருகதை இல்லை” – குலசேகரன் பதிலடி

“துன் சம்பந்தனாரை விமர்சிக்க வேதமூர்த்திக்கு அருகதை இல்லை” – குலசேகரன் பதிலடி

662
0
SHARE
Ad

m-kulasegaranகோலாலம்பூர், மே 27 – “புதிதாக துணை அமைச்சர் பொறுப்பேற்றிருக்கும் வேதமூர்த்திக்கு நாவடக்கம் தேவை. அவர் மட்டுமே இந்தியர்களின் தீர்க்க தரிசியெனவும், அவர்களின் உரிமைகளையும், நலன்களையும் தேவைகளையும் இரட்சிக்க வந்த இறை தூதர் என்ற கற்பனையில் மிதந்து கொண்டிருக்கின்றார்” என்று  ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து குலசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“வேதமூர்த்திக்கு முன்னால் எத்தனையோ தனிப்பட்ட மனிதர்கள் இந்நாட்டில் இந்தியர்களுக்காக போராடியிருக்கின்றார்கள். காலத்தின் தேவைக்கேற்ப அப்போராட்டங்களின் தன்மைகளும் அதன் வெளிப்பாடுகளும் வேறுபட்டிருந்தனவே தவிர , இந்தியர்கள் முன்னேற வேண்டும் என்ற வேட்கை அனைவருக்கும் இருந்தது. உதாரணத்துக்கு ஜசெக வின்  பட்டு , டேவிட் , கர்பால் சிங் ,கணபதி ராவ் போன்றவர்கள் சமுதாயத்திற்காக போராடி சிறை சென்றுள்ளார்கள்.”

#TamilSchoolmychoice

“மறைந்த துன் வி.தி சம்பந்தனாரைப் பற்றி வேதமூர்த்தி அண்மையில் வெளியிட்டுள்ள கருத்தில், துன் வி.தி சம்பந்தன் இந்தியர்களை நட்டாற்றில் விட்டு விட்டுப் போய்விட்டார் என்று வேதனையளிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.அவர் வாழ்ந்த காலத்தில் வாழாத இவருக்கு அப்பெருந்தலைவரைக் குறை கூற அருகதை துளியேனும் இல்லை. சம்பந்தன் ம.இ.கா வின் தலைமைப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் இந்தியர்களின் பிரச்சனைகள் வேறு விதமாக இருந்தன.”

“முதல், இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த இந்தியர்கள் அப்பொழுது இந்தியாவிலிருந்து வந்தவர்களாக இருந்தார்கள். படிப்பறிவில்லாதவர்களும், வெகுளிகளும், தன்னம்பிக்கை இல்லாதவர்களுமாக அதிகமானோர் கஞ்சிக் கூலிகளாக இந்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டனர்.இந்தியாவில் இருந்த ஜாதிக் கொடுமை தாங்காமலும், ஓரங்கட்டப்பட்டதாலும்  பயந்துபோய் புதுவாழ்க்கையைத் தேடி மலாயாவிற்கு வந்தவர்களும் இதில் அடங்குவர்.உடலை மறைக்க ஒரு முழந்துணியும், ஒரு வேளை கஞ்சியும், தலைக்கு மேல் ஒரு கூரையும் இருந்தால் போதும் என்ற நிலைமையிலிருந்த சமுதாயத்திடம் எந்த உரிமைகளைப் பற்றி பேசமுடியும்?”

“அப்போதைய காலக்கட்டத்தில் இந்தியர்களின் குடியுரிமைதான் ஒரு தலையாய பிரச்சனையாக இருந்தது. நாடு சுதந்திரம் பெறும் தருவாயில் லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன ஆகும்? அவர்களைத் திரும்பவும் இந்தியாவிற்கே அனுப்ப வேண்டி வருமோ என்ற நிலைமை வந்தால் எப்படி சமாளிப்பது என்ற சோதனையான சூழ்நிலையில் தான் துன் அப்போது இருந்தார் என்பது உண்மை.”

அன்று மட்டும் துன் போராடாமல் இருந்திருந்தால், இன்று நாம் இந்த நாட்டின் பிரஜையாகாமல் நாடற்ற அனாதைகளாகவே வாழ்ந்து கொண்டிருப்போம். இலங்கையில் தமிழர்கள் இன்னமும் லட்சக்கணக்கானோர் நாடற்றவர்களாகவே இருப்பதற்கு அன்றைய தலைவர்களின் விவேகமற்ற செயல்தான் காரணம் என்று துணிந்து கூறலாம். அது போன்ற நிலைமை நமக்கு வராமல் நம்மை காப்பாற்றியவர் துன் சம்பந்தன் என்றால் அது மிகையாகாது.”

“மலாய்க்காரர் அல்லாதவர் குடியுரிமைப் பெறுவதற்கு மலாய்க்காரர்களுக்கு சில சிறப்பு சலுகைகளை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அப்பொழுது நிலவியது. அதற்காக  துன்  இந்திய சமூகத்தினரை விற்றுவிட்டார் என்று கூறுவது சரியாகாது. இந்த முடிவானது துன் அவர்களால் மட்டுமே எடுக்கப்பட்டதன்று. அன்று இருந்த மூவினத் தலைவர்களின் இணக்கத்தோடு பிரிட்டிஷ்  அரசு ஒப்புதல் அளித்த பின்னரே சாத்தியமானது . அதன் பயனாக லட்சக்கணக்கான இந்தியர்கள் இந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றனர் என்பதனை வேதமூர்த்தி உணரவேண்டும்.”

“மலாய்க்காரர்களுக்கான சலுககைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்று இருந்ததை, இப்பொழுதுள்ள தேசிய முன்னணி அரசாங்கம் தான் தன் பங்காளிக் கட்சிகளான ம.இ.கா. ம.சீ ச வின் ஒப்புதலோடு என்றென்றும் அது நிலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றியது.குடியுரிமைப் பிரச்சனை ஒருவழியாகத் தீர்ந்த பின்னர், தோட்டத் துண்டாடல் இன்னொரு பிரச்சனையாக உருவெடுத்தது.”

“வெள்ளையன் நீண்ட நாட்களுக்கு மலாயாவில் தாக்கு பிடிக்க முடியாது என்று உணர்ந்து தோட்டங்களை விற்க ஆரம்பித்தான். இந்தியத் தொழிலாளர்களை அம்போ என்று நடுத்தெருவில் விட்டு விட்டான்.கட்டிய துணியுடன், மனைவி பிள்ளைகளுடன் சட்டி பானைகளுடன் தோட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்கின்ற சூழ்நிலையில் இந்தியர்கள் இருந்தார்கள்.”

“அப்பொழுது தான் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம் எனும் மாபெரும் பொருளாதார  இயக்கம் தொடங்கப்பட்டது இந்தியர்களுக்காக அப்பொழுது அன்னாரால் ஆரம்பிக்கப்பட்ட கழகம் இது. நாம் உழைத்த மண்ணையே நமக்குச் சொந்தமாக்கிக் கொண்டால் வீதியில் நிற்க வேண்டியதில்லையே என்கிற உயர்ந்த நோக்கத்துடன் துவக்கப்பட்ட கூட்டுறவு கழகம் அது.”

“தொலைப்பேசி வசதிகள், நேர்த்தியான சாலைகள் , தொலைக்காட்சி , கையடக்கப் பேசி இல்லாத காலத்தில் துன் சிரமப்பட்டு தோட்டம் தோட்டமாகச் சென்று  பாமர, படிப்பறிவு குறைந்த மக்களிடையே கூட்டுறவின் மேன்மையை விளக்கி அங்கத்தினர்களைச் சேர்த்தார். குருவிக்கும் கூடு உண்டு ஆனால் ஏழைக்கோ வீடு இல்லை என்று சொல்லி ஒவ்வொரு இந்தியனிடமிருந்தும் பத்து பத்து வெள்ளியாய் வசூல் செய்தார். அதனைக் கொண்டு தோட்டங்கள் பல வாங்கினார். அதன் பலன் இன்று 21 தோட்டங்கள் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தம்.”

“அரசியலுக்கு வரும் முன்பே, பதவி என்று ஒன்று இல்லாமலேயே கல்விக்காக  2.5 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கி தன் சொந்தப் பணத்தையும், மக்கள் கொடுத்த நன்கொடையையும் வைத்து சுங்கை சிப்பூட்டில் தமிழ்ப் பள்ளி ஒன்றை நிறுவினார். 1954ல் நிறுவப்பட்ட அந்த காந்தி பாடசாலையானது , அந்த காலத்திலேயே செங்கற்களால் கட்டப்பட்டு , விளையாட்டு மைதானத்தோடு கூடிய ,  தேசிய பள்ளிகளை விடச் சிறந்ததாக அமையப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.”

“மேலும் அவர் காலத்தில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் மற்ற மொழி ஆசிரியர்களுக்கும் சம்பளத்தில் மிகுந்த வேறுபாடு இருந்தது. அதற்காக அப்போதைய கல்வி அமைச்சர்  ஹுசேனுடன் போராடி எல்லா ஆசிரியர்களும் சம சம்பளம் பெறும் வகையில் மாற்றத்தைக் கொண்டு வந்தார். இது வேதமூர்த்திக்கு தெரியவில்லை”

“1974 வரை அவர் அமைச்சரவையில் இருந்த வரை 20 சத விகிதத்திற்கு குறைவில்லாமல்  இந்தியர்கள்  அரசாங்க உயர் பதவிகளை வகித்து வந்துள்ளார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால்  கல்வித்துறை, காவல் துறை, சுகாதாரத் துறை, பொதுப் பணித்துறை என்று பல துறைகளில் பேர் சொல்லக்கூடிய அளவிற்கு பணியாற்றி இருக்கின்றார்கள். 80க்கு பிறகு ம.இ.கா வின் புதிய தலைமைத்துவத்தின் கீழ் இது போன்ற முக்கியத் துறைகளில் இந்தியர்களின் பங்களிப்பு குறைந்து கொண்டே போய் இப்பொழுது அடி மட்டத்திற்கு போய்விட்டது. துன் இருக்கும் போது இருந்த நிலைமை மீண்டும் நமது இந்தியர்களுக்கு வருமா என்பது பற்றி வேதமூர்த்தி சிந்திக்க வேண்டும்.”

“தயவு செய்து ஒரு சிறந்த ராஜதந்திரியாக விளங்கிய துன் அவர்களை இழிவு படுத்தியோ தாழ்த்தியோ  பேசவேண்டாம். அவர் செய்த இந்தியர்களுக்கான குடியுரிமை போராட்டம், தேசிய நில நிதி சங்கத்தை உருவாக்க அவர் பட்ட பாடு, இந்த இரண்டு காரியங்களுக்காகவே துன்   அவர்களுக்கு கோவில் கட்டிக் கும்பிடலாம்.”

“அன்றைய சூழ்நிலைகளுக்கேற்ப அவர் செய்ய வேண்டியதை சிறப்பாகவே செய்துவிட்டுப் போனார்.  துன் வாழ்ந்த காலத்தில் வேதமூர்த்தி ஒரு குழந்தை, அவரைப் பற்றி  இவர் இங்கிலாந்துக்குப் போன பிறகுதான் படித்துத் தெரிந்து கொண்டார் . ஆகவே வேதமுர்த்தி துன் சம்பந்தனைப் பற்றி குறை கூறுவது கண்டிக்கத்தக்கது.”

“அரசியலில் வந்து ஆதாயம் அடையாமல் போன ம.இ.கா தலைவர்கள் யாரும் இல்லை. இதற்கு எதிர் மறையாக இருந்து தன் சொந்தப் பணத்தை சமுதாய நலனுக்காக இழந்து, இறுதியில் ஒரு சாமானிய மனிதராகவே வாழ்ந்து மறைந்த ஒரு மாபெரும் தலைவனை , உத்தம சீலரை, இகழ்ந்து கூற வேதமூர்த்திக்கு அருகதை இல்லை” என்று தனது அறிக்கையில் குலசேகரன் தெரிவித்துள்ளார்.