Home 13வது பொதுத் தேர்தல் “சிலர் எல்லை மீற முயன்றாலும் பேரணி அமைதியான முறையிலேயே நடக்கும்” – அன்வார் உறுதி

“சிலர் எல்லை மீற முயன்றாலும் பேரணி அமைதியான முறையிலேயே நடக்கும்” – அன்வார் உறுதி

506
0
SHARE
Ad

anwar-angry-sliderபெட்டாலிங் ஜெயா, மே 27 – தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக நடத்தப்படும் கறுப்பு 505 பேரணிகளில் கலந்து கொள்ளும் சிலர் எல்லை மீற முயற்சி செய்தாலும், பேரணி எப்போதும் அமைதியான முறையில் தான் நடைபெறும் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

“நாம் நடத்துவது அமைதிப் பேரணி, ஊர்வலம் அல்ல என்று அறிவித்தவுடன் சில ஆயிரம் பேர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதைக் காண முடிகிறது. அவர்கள் பேரணிக்கு அப்பால் செல்ல விரும்புகிறார்கள் ஆனால் நாம் அமைதியான முறையில் பேரணி நடப்பதையே விரும்புகிறோம்” என்று அன்வார் தெரிவித்துள்ளார்.

மேலும் “பேரணி ஏற்பாட்டாளர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், பேரணியின் போது முழு ஒத்துழைப்பை தந்தனர். எனவே அவர்களுக்கு எனது நன்றியைக் கூறிக்கொள்கிறேன். மேலும் மே 25 பெட்டாலிங் ஜெயா பேரணியோடு எங்களது போராட்டம் நின்று விடப்போவதில்லை. அது மேலும் அமைதியான முறையில், வன்முறைகள் இன்றி தொடரும்” என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர், வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவதால் மக்களிடம் குழப்பமே நீடிக்கும் என்று கருத்து கூறியிருப்பது குறித்து அன்வாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “எகிப்திய அதிபர் ஹுஸ்னி முபாரக், சிம்பாப்வே அதிபர் முகாபே, பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினன்ட் மார்கோஸ் ஆகியோரும் இதையே தான் கூறினார்கள். அதையே தான் மகாதீர் கூறியுள்ளார். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை” என்று அன்வார் தெரிவித்துள்ளார்.