கேமரன் மலை, மே 31 – நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் கேமரன் மலைத் தொகுதியில் ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவை எதிர்த்துப் போட்டியிட்டு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்ற ஜசெக கட்சியைச் சேர்ந்த எம்.மனோகரன், தனது தொகுதியில் தேர்தல் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு அத்தொகுதியில் மறுதேர்தல் நடத்தப்படக் கோரி வரும் ஜூலை மாதம் 8 அல்லது 9 ஆம் தேதிகளில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாகவும் மனோகரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“கேமரன் மலைத் தொகுதி மக்கள் உண்மையில் என் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக ஜசெக வுக்கு வாக்களித்து தங்களது முழு ஆதரவைக் கொடுத்திருக்கிறார்கள்.ஆனால் தேர்தல் முறைகேடுகள் காரணமாக 462 வாக்குகள் வித்தியாசத்தில் நான் தோல்வியுற்றேன்.”
“வாக்குகள் எண்ணிக்கையின் போது நிறைய வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதோடு நிறைய முறைகேடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன”
“நான் பீனிக்ஸ் பறவை போன்றவன், தோல்விகளைக் கண்டு துவண்டு விட மாட்டேன். மீண்டும் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவேன்.”
“எனவே 14 ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி நமதே என்று இப்போதே கூறிக் கொள்கிறேன்” என்று நேற்று தனது தலைமையில் நடைபெற்ற நன்றி கூறும் கூட்டத்தில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இக்கூட்டத்தில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் உட்பட அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.