கோலாலம்பூர்: நடந்து முடிந்த கேமரன் மலை இடைத் தேர்தலில், கட்சியின் சின்னத்தைக் கொண்டிருந்த ஆடையை அணிந்து வாக்குப் பதிவுச் செய்யப்படும் பகுதிக்குள் நுழைந்ததற்காக, 1954-ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தின் கீழ், மனோகரன் மீது குற்றம் சாட்டப்படுமா இல்லையா, என்று கூடிய விரையில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார்.
பெர்செ அமைப்பு இது குறித்து தேர்தல் ஆணையம் மனோகரனின் மீது காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டது. அந்தக் குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இருந்தால், மனோகரன் விசாரிக்கப்படுவார் என அசார் கூறினார்.
இது குறித்த விசாரணையை மேற்கொள்ள போதுமான கால அவகாசம் தேர்தல் ஆணையத்திற்குத் தேவைப்படுவதாக, அவர் மலேசியா கினி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்குப் பின்னர், தாம் அறியாமல் செய்த தவறுக்காக மனோகரன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். ஆயினும், பெர்செ அமைப்பு, அவரின் அக்காரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறி காவல் துறையினரையும், அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்தையும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியது.