Home வணிகம்/தொழில் நுட்பம் கெந்திங் நிறுவனம் 190 மில்லியன் நன்கொடை – 13வது பொதுத் தேர்தலுக்காகவா?

கெந்திங் நிறுவனம் 190 மில்லியன் நன்கொடை – 13வது பொதுத் தேர்தலுக்காகவா?

652
0
SHARE
Ad

Genting-Highland-photoஜூன் 1 இந்த வருடத்தின் முதல் காலாண்டில் நாட்டின் மிகப் பெரிய பங்குச் சந்தை பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான கெந்திங் நிறுவனம் 190 மில்லியன் ரிங்கிட் தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

கெந்திங் நிறுவனத்தின் சமூகக் கடமைக்கான நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள இந்த தொகை நடந்து முடிந்த 13வது பொதுத் தேர்தலுக்காக வழங்கப்பட்ட நன்கொடையா என கேள்வி எழுப்பிய கினிபிஸ் (Kinibiz) வணிக செய்தி வலைத்தளம் இதுகுறித்து செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இத்தகைய மிகப் பெரிய தொகையை நன்கொடையாக வழங்கியுள்ள காரணத்தால், கெந்திங் நிறுவனத்தின் ஆண்டு இறுதி கணக்கில், அதன் லாபம் பெருமளவில் குறையும் எனவும் அந்த செய்தி குறிப்பிடுகின்றது.

2013ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், கெந்திங் 967.6 மில்லியன் ரிங்கிட் லாபத்தை ஈட்டியது. ஆனால், இந்த 190 மில்லியன் நன்கொடையை வழங்காதிருந்தால், அந்த நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் 20 சதவீதம் கூடுதலாகி, 1157.6 மில்லியன் ரிங்கிட்டாக இருந்திருக்கும்.

பங்குச் சந்தை நிறுவனங்களின் கணக்கறிக்கைகளை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள், இத்தகைய பெரிய தொகையை பல துணை நிறுவனங்களின் வாயிலாக கெந்திங் நிறுவனம் வழங்கியுள்ளது குறித்து தங்களின் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனால், கெந்திங் குழுமத்தின் அடிப்படை லாபம் சரிவு காணும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.

அறவாரியங்களை முன்வைத்து அவற்றுக்கு கொடுப்பது போன்று இந்த நன்கொடைகள் பொதுத் தேர்தலுக்காக வழங்கப்பட்ட நன்கொடைகளாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் ஆரூடம் கூறியுள்ளனர்.

இதே போன்று மற்ற பங்குச் சந்தை நிறுவனங்களும், பொது நிறுவனங்களும் நன்கொடைகள் வழங்கியிருக்கலாம் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பதில் கருத்து சொல்ல கெந்திங் அதிகாரிகள் கிடைக்கவில்லை என்றும் கினிபிஸ் தனது செய்தியில் கூறியுள்ளது.

உதாரணமாக, கெந்திங் பிளாண்டேஷன் நிறுவனம், 35 மில்லியன் ரிங்கிட் தொகையை, “யாயாசான் கெமிலாங் 1மலேசியா” என்ற அறவாரியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த அறவாரியத்தின் நோக்கம் இதுவரை பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த அறவாரியம், வறுமை ஒழிப்பிற்காக அக்கறை கொண்டது என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் 1மலேசியா என்ற பெயரைக் கொண்டிருப்பதால் அந்த அறவாரியம் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டதாக இருக்கலாம் என்றும் இந்த அறவாரியம் பொதுத் தேர்தலோடு தொடர்புடையதாகவும் இருக்கலாம் என்றும் ஆரூடம் கூறப்பட்டுள்ளது.