Home One Line P2 கெந்திங் : நிதிச் சிக்கலைத் தீர்க்க சொந்தப் பங்குகளை அடமானம் வைத்த லிம் கோக் தே

கெந்திங் : நிதிச் சிக்கலைத் தீர்க்க சொந்தப் பங்குகளை அடமானம் வைத்த லிம் கோக் தே

1113
0
SHARE
Ad

ஹாங்காங் : ஹாங்காங்கில் இயங்கும் உல்லாசக் கப்பல் நிறுவனம் கெந்திங் ஹாங்காங் லிமிடெட், தான் திருப்பித் தரவேண்டிய கடன்களை நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் திருப்பித் தர முடியாமல் நிதிச் சிக்கலில் சிக்கியுள்ளதாக நேற்று ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

கெந்திங் குழுமத்தின் தலைவர் டான்ஸ்ரீ லிம் கோக் தே (படம்) கட்டுப்பாட்டில் இந்த நிறுவனம் இயங்குகிறது.

சொந்தப் பங்குகளை அடமானம் வைத்த லிம் கோக் தே

இதற்கிடையில் அந்த நிறுவனத்தில் தான் கொண்டிருக்கும் அனைத்துப் பங்குகளையும் செலுத்த வேண்டிய கடனுக்கு ஈடாக லிம் கோக் தே அடமானமாக வைத்துள்ளார் என ஊடகங்கள் இன்று தெரிவித்தன.

#TamilSchoolmychoice

நிதிச் சிக்கலில் இருக்கும் கெந்திங் ஹாங்காங் நிறுவனத்தின் 69 விழுக்காடு பங்குகளை டான்ஸ்ரீ லிம் கோக் தே கொண்டிருக்கிறார்.

தான் வழங்க வேண்டிய கடன்களைக் கட்டத் தவறியதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பங்குகள் 38 விழுக்காடு வரை நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) ஹாங்காங் பங்குச் சந்தையில் வீழ்ச்சியடைந்தன.

டிசம்பர் 2019 தொடங்கி தனது மதிப்பில் மூன்றில் இரண்டு விழுக்காட்டை இதுவரையில் கெந்திங் ஹாங்காங் லிமிடெட் இழந்துள்ளது.

கெந்திங் ஹாங்காங் லிமிடெட் ஹாங்காங் பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டிருக்கிறது. ஜூலை 31 வரை அந்நிறுவனம் செலுத்த வேண்டிய கடன்களின் மொத்தத் தொகை 3.4 பில்லியன் டாலர்களாகும்.

தங்கள் வசம் தற்போது இருக்கும் சொற்ப ரொக்கக் கையிருப்பைக் கொண்டு நிறுவனத்தை நடத்துவதற்கான அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே தாங்கள் செலவிடப் போவதாக கெந்திங் ஹாங்காங் அறிவித்தது.

எனவே, தங்களின் கடன்காரர்கள் தங்களுக்குள் ஒரு குழுவை அமைத்துக் கொண்டு கடன்களுக்கான மறுசீரமைப்பு பரிந்துரை ஒன்றை சமர்ப்பிக்குமாறு அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

தனது நிதிச் சிக்கலுக்கு கொவிட்-19 பாதிப்புகளை காரணம் காட்டியிருக்கிறது கெந்திங் ஹாங்காங். இதனால் வணிகம் பாதிக்கப்பட்டு ரொக்கக் கையிருப்பு குறைந்தது என்றும் கெந்திங் ஹாங்காங் தெரிவித்தது.

கெந்திங் ஹாங்காங் நிறுவனத்தில் 76 விழுக்காட்டுப் பங்குகளைக் கொண்டிருக்கிறார் லிம். இது ஏறத்தாழ 6 பில்லியன் பங்குகளாகும். இவை அனைத்தும் தற்போது அடமானமாக வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஆண்டு மார்ச் வரையில் தனக்குச் சொந்தமான 550 மில்லியன் கெந்திங் பெர்ஹாட் பங்குகளை அவர் மற்ற விவகாரங்களுக்காக அடமானமாக வைத்திருக்கிறார். இது அவரது மொத்த பங்குகளில் 32 விழுக்காடாகும். ஓராண்டுக்கு முன்னர் அவர் 70 மில்லியன் சொந்த பங்குகளை மட்டுமே அடமானமாக வைத்திருந்தார்.

வங்கிகள் கடன் வழங்கும் அடிப்படை

பொதுவாக, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு வங்கிகள் அந்நிறுவனங்களின் பங்கு விலைகளின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு கடன்களை வழங்கும்.

உதாரணமாக ஒரு நிறுவனத்தின் பங்கு விலை 10 ரிங்கிட் என்று வைத்துக் கொள்வோம். அந்நிறுவனத்தின் செயல் நடவடிக்கைகளுக்கு கடன் வழங்குவதாக இருந்தால் அந்த மதிப்பில் 50 விழுக்காட்டுக்கு வங்கி கடன் கொடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆக 100 மில்லியன் ரிங்கிட் பங்கு விலை மதிப்புடைய நிறுவனத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட் வரை கடன்களை வழங்கும்.

ஆனால் பங்கின் விலை 10 ரிங்கிட்டிலிருந்து 6 ரிங்கிட்டாக குறையும் நிலைமை ஏற்பட்டால், இப்போது கடன்களை 6 ரிங்கிட்டிலிருந்து 50 விழுக்காட்டுக்கு – அதாவது 3 ரிங்கிட் என்ற அளவிலேயே வங்கிகள் மதிப்பிடும். ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கும் கடன்களை ஈடு செய்ய இடைவெளி அல்லது துண்டு விழும் தொகையை வங்கிக்கு கடன் பெற்ற நிறுவனம் செலுத்த வேண்டும்.

அல்லது அதற்கு ஈடான சொத்துகளை பங்குதாரர்கள் அடமானம் வைக்க வேண்டும்.

இத்தகைய தொகையைச் செலுத்துவதற்கு பதிலாகத்தான் லிம் கோக் தே தனது சொந்தப் பங்குகளை கடனுக்கு ஈடாக அடமானம் வைத்திருக்கிறார்.

லிம் கோக் தே சொத்து மதிப்பு

புளும்பெர்க் வணிக நிறுவனம் உலகமெங்கும் இருக்கும் பணக்காரர்களின் சொத்து மதிப்புகளைக் கொண்டு அவர்களை பட்டியலிட்டு வைத்துள்ளது. அதன்படி இந்த ஆண்டின் தொடக்கத்தில் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த லிம்மின் சொத்து மதிப்பு தற்போது 700 மில்லியன் டாலராகக் குறைந்திருக்கிறது.

அடமானம் வைக்கப்பட்டிருக்கும் பங்குகள் இந்த சொத்தில் சேர்க்கப்படவில்லை.

1965-ஆம் ஆண்டில் டான்ஸ்ரீ லிம் கோ தோங் என்பவரால் தொடங்கப்பட்டது கெந்திங் குழுமம். இவர் லிம் கோக் தேயின் தந்தையாவார். இன்றைக்கு சூதாட்ட மையங்கள், தோட்டங்கள், உல்லாசக் கப்பல்கள், சுற்றுலா, என பலதரப்பட்ட வணிகங்களில் ஈடுபட்டு வருகிறது இந்நிறுவனம்.

2003-ஆம் ஆண்டில் தனது தந்தையாரிடமிருந்து கெந்திங் நிறுவனத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டை லிம் கோக் தே ஏற்றுக் கொண்டார்.

கோலாலம்பூரிலும் கெந்திங் பங்குகள் விலை வீழ்ச்சி

இதற்கிடையில் இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் பங்குச் சந்தையில் கெந்திங் பெர்ஹாட் பங்குகள் 5.8 விழுக்காடு வீழ்ச்சியடைந்தன.

இத்தனை ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் தனது குழும பணியாளர்களின் சம்பளத்தைக் குறைக்கும் நடவடிக்கையை முதன் முறையாக கெந்திங் அறிவித்தது.

கெந்திங் ஹாங்காங் நிறுவனத்திற்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிதிச் சிக்கல் ஒட்டுமொத்த கெந்திங் குழுமத்தையும் பாதிக்குமா என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. எனினும் மிகப் பெரிய அளவில் நிலம் மற்றும் அசையாச் சொத்துகளைக் கொண்டிருப்பதால் அவற்றை விற்பதன் மூலம் நிதிப் பிரச்சனைகளை அந்தக் குழுமம் சுலபமாக சமாளிக்க முடியும் எனக் கருதப்படுகிறது.

கெந்திங் ஹாங்காங் நிறுவனத்தின் தாய் நிறுவனமான கெந்திங் குழுமம் கோலாலம்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

கெந்திங்கின் மற்றொரு துணை நிறுவனமான கெந்திங் சிங்கப்பூர் லிமிடெட் சிங்கப்பூரில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரின் இரண்டு சூதாட்ட மையங்களில் ஒன்றை கெந்திங் நடத்தி வருகிறது.

அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரிலும் சூதாட்ட மையங்களை கெந்திங் கொண்டிருக்கிறது.

உல்லாசக் கப்பல் பயணச் சுற்றுலாத் துறையில் முன்னணி வகித்த கெந்திங் பல உல்லாசக் கப்பல்களைக் கொண்டு சேவைகளில் ஈடுபட்டது. கொவிட்-19 பாதிப்புகளால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வணிகமாக உல்லாசக் கப்பல் வணிகம் திகழ்கிறது.

1எம்டிபி விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான ஜோ லோவின் உல்லாசப் படகு மலேசிய அரசாங்கத்தால் ஏலத்திற்கு விடப்பட்டபோது அதை கெந்திங் குழுமம்தான் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.