புத்ரா ஜெயா : மலேசியத் தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக அப்துல் கானி சாலே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் செயலாளராகப் பணியாற்றியிருக்கிறார்.
62 வயதான அவர் வாழ்நாள் முழுவதும் அரசு சேவையில் இருந்தவராவார். அவர் ஆகக் கடைசியாக தேர்தல் ஆணையச் செயலாளராகப் பதவி வகித்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதி அவர் தனது அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
தனது முந்தைய பணிகளின் காரணமாக தேர்தல்கள் குறித்த நிறைந்த அனுபவம் வாய்ந்தவராக அவர் கருதப்படுகிறார்.
2018-இல் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி தொடங்கிய போது புதிய தேர்தல் ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்ட அசார் அசிசான் ஹருணுக்குப் பதிலாக அப்துல் கானி இந்தப் பொறுப்புக்கு நியமிக்கட்டிருக்கிறார்.
கடந்த ஜூன் 29-ஆம் தேதி தேர்தல் ஆணையத் தலைவர் பதவியிலிருந்து அசார் அசிசான் ஹருண் விலகினார். அதைத் தொடர்ந்து அவர் நாடாளுமன்ற அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
வழக்கமாக தேர்தல் ஆணையப் பொறுப்புகளுக்கு அரசாங்க சேவைகளில் இருந்தவர்கள்தான் நியமிக்கப்படுவார்கள். அசார் அசிசான் ஹருண்தான் அரசாங்க சேவையில் அல்லாத முதல் வெளிநபர் ஆவார்.
தற்போது மீண்டும் பழைய பாரம்பரியப்படி முன்னாள் அரசாங்க சேவையாளர் ஒருவரே தேர்தல் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அப்துல் கானி சாலே அடுத்த நான்காண்டுகளுக்கு தேர்தல் ஆணையத் தலைவர் பொறுப்பை வகிப்பார்.
மற்றொரு முன்னாள் அரசு ஊழியரான நிக் அலி மான் யூனுஸ் ரம்லான் இப்ராகிமுக்குப் பதிலாக புதிய தேர்தல் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த பிப்ரவரி 2019-இல் நியமிக்கப்பட்ட ரம்லான் இப்ராகிம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி பதவி விலகினார். அதைத் தொடர்ந்து அவர் மலேசிய சுற்றுலா மேம்பாட்டுத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார். வெளியுறவு அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார்.
அவருக்குப் பதிலாகத்தான் நிக் அலி மான் யூனுஸ் ரம்லான் நியமனம் பெற்றிருக்கிறார்.
மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஐந்து உறுப்பினர்களை மாமன்னர் நியமிப்பார். அதே சட்டங்களின்படி ஆளும் அரசாங்கம் தனது விருப்பப்படி தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்களை மாற்றவோ, அகற்றவோ முடியாது.
அவர்களாகவே பதவி விலகினாலோ, அல்லது செயல்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலோ மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாளர் ஒருவர் அகற்றப்பட முடியும்.
அப்படியே கட்டாயமாக ஒருவரை அகற்றுவதாக இருந்தால் அதற்கென சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்து அந்த விசாரணைகளின் முடிவின்படிதான் அகற்ற முடியும்.
விரைவில் நடைபெறவிருக்கும் சபா தேர்தல், எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்ற ஆரூடங்கள் – இந்த சூழ்நிலையில் தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவர் நியமனம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பிரதமர் மொகிதின் யாசினின் கரங்களை வலுப்படுத்தும் நகர்வாகவும் கருதப்படுகிறது.
தற்போதைய தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாளர்கள் பின்வருமாறு :
தலைவர் : அப்துல் கானி சாலே (Abdul Ghani Salleh) – முன்னாள் அரசுப் பணியாளர்
துணைத் தலைவர் : அஸ்மி ஷாரோம் (Azmi Sharom) – முன்னாள் கல்வியாளர்
உறுப்பினர்கள் :
நிக் அலி மாட் யூனுஸ் (முன்னாள் அரசுப் பணியாளர்)
சின் பாய்க் யூங் (முன்னாள் அரசுப் பணியாளர்)
பைசால் எஸ்.ஹாசிஸ் (முன்னாள் கல்வியாளர்)
ஸோ ரண்டாவா (முன்னாள் சமூக செயல்பாட்டாளர்)
அவாங் சஹாரி இஎம் நட்சீர் (முன்னாள் காவல் துறை அதிகாரி)