கோலாலம்பூர் – நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிர்வாக சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக மலேசியத் தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக பிரபல வழக்கறிஞர் அசார் அசிசான் (படம்) நியமிக்கப்பட்டார். ஆர்ட் ஹருண் எனப் பரவலாக அறியப்படும் அசார் அசிசானின் நியமனத்திற்கு மாமன்னரும் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதற்கு முன்னர் தேர்தல் ஆணையத்தின் தலைவரான முகமட் ஹாஷிம் அப்துல்லா ஜூலை மாதத்தில் பதவி ஓய்வுக்கு முன்னரே தனது பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள முடிவெடுத்ததைத் தொடர்ந்து புதிய தலைவராக 56 வயதான அசார் அசிசான் நியமிக்கப்பட்டுள்ளார்.
மலாயாப் பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பை முடித்த அசார் அசிசான் இலண்டன் பல்கலைக் கழகத்தின் கிங்ஸ் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
1987 முதல் வழக்கறிஞராகப் பணியாற்றிவரும் அசார் அசிசான் தேர்தல் தொடர்பான சட்டங்களில் திறன்வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்.
இதற்கிடையில் அசாரின் நியமனத்தை வரவேற்ற அம்னோவின் கைரி ஜமாலுடின் அசார் அந்தப் பதவிக்குப் பொருத்தமானவர் என்றாலும், அந்த நியமனம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
புதிய தேர்தல் ஆணையத் தலைவர் அசாரின் பின்புலத்தை கீழ்க்காணும் வரைபடத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்: