Home One Line P2 கெந்திங் உள்ளிட சூதாட்ட மையங்கள் மீட்சி பெற முடியுமா?

கெந்திங் உள்ளிட சூதாட்ட மையங்கள் மீட்சி பெற முடியுமா?

926
0
SHARE
Ad

கோலாலம்பூர் – உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொவிட்-19 பிரச்சனைகளால் பெரும் இழப்பை எதிர்நோக்கியுள்ளன கெந்திங் போன்ற சூதாட்ட மையங்கள்.

கெந்திங், உலகம் எங்கிலும் இருந்து இலட்சக்கணக்கான வருகையாளர்களை ஈர்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அதிக மக்கள் கூட்டம், ஏராளமான எண்ணிக்கையிலான அறைகளைக் கொண்ட சொகுசு உல்லாச விடுதிகள், குடும்பத்தினரோடு குதூகலிக்க பிரம்மாண்டமான விளையாட்டு பொழுதுபோக்கு பூங்காக்கள் என அந்த மையம் வடிவமைக்கப்பட்டது.

தொடர்ந்து சிங்கையில் திறப்பு விழா கண்ட இரண்டு சூதாட்ட மையங்களும் இதே பாணியில்தான் உருவாக்கப்பட்டன. இந்த இரண்டு மையங்களில் கெந்திங் நிறுவன சூதாட்ட மையமும் ஒன்று.

#TamilSchoolmychoice

இப்போதோ நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.

விமானப் பயணங்கள் முடங்கிக் கிடக்கும் நிலையில் வெளிநாட்டுப் பயணிகள் இந்த மையங்களுக்கு வருவது முற்றாக நின்று விட்டது. உள்நாட்டு வருகையாளர்களை மட்டும் நம்பி இந்த மையங்கள் இயங்க முடியாது.

குறிப்பாக சீனா போன்ற நாடுகளில் இருந்து வந்த சூதாட்ட ஆர்வலர்கள்தான் இது போன்ற மையங்களுக்கு வருமானத்தை ஈட்டித் தந்தனர்.

மக்காவ் தீவில் சூதாட்ட விடுதிகள் பிப்ரவரி 19-ஆம் தேதியே திறக்கப்பட்டு விட்டன. ஆனால், மக்கள் இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு வருகை தரவில்லை. சீனாவிலிருந்தும் ஹாங்காங்கில் இருந்தும் மக்கள் வருவதற்கு இன்னும் தடைகள் நீடிப்பதால் வருகையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கின்றன.

சிங்கப்பூரிலோ, ஜூன் மாதம் வரை சூதாட்ட விடுதிகள் திறக்கப்படாது என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது.

இதன் காரணமாக, நிறைய தங்கும் விடுதிகளின் அறைகள் காலியாகக் கிடப்பதாலும், சூதாட்ட மையங்களில் வருகையாளர்கள் குறைந்து விட்டதாலும் ஏற்பட்டிருக்கும் பெரும் வருமான இழப்பை எப்படி சரி செய்வது என சூதாட்ட நிறுவனங்கள் திணறிக் கொண்டிருக்கின்றன.

உதாரணமாக, கெந்திங் மையத்தில் சுமார் 10 ஆயிரம் தங்கும் விடுதிகள் அறைகள் இருக்கின்றன. உள்நாட்டு மக்களால் இவற்றை எந்தக் காலத்திலும் நிரப்ப முடியாது. வெளிநாட்டுப் பயணிகளால்தான் முடியும்.

வெளிநாட்டுப் பயணிகள் வருகை தர முடியாது என்ற நிலைமையில் வருமானத்தை எப்படி சரிகட்டுவது என்பது சூதாட்ட நிறுவனங்களின் பெரும் சவாலாகும்.

அண்மையக் காலங்களில் கெந்திங் மையங்களுக்கு இந்தியாவிலிருந்தும் நிறைய பயணிகள் வருகை தந்தார்கள். அதுவும் இப்போது நின்று விட்டது.

உல்லாசக் கப்பல் பயணங்களும் முடக்கம்

கெந்திங் இன்னொரு பிரச்சனையையும் எதிர்நோக்கியுள்ளது. ஒரு கட்டத்தில் உல்லாசக் கப்பல் பயணங்களை வழங்கும் முன்னணி நிறுவனமாக இது திகழ்ந்தது.

பல உல்லாசக் கப்பல்கள் கொவிட்-19 பாதிப்பால் நடுக்கடலில் நிலைகுத்தி தத்தளித்துக் கிடந்த நிலைமைகளை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இனி எப்போது மக்கள் மனம் மாறி மீண்டும் உல்லாசக் கப்பல் பயணத்திற்கு ஆர்வத்துடன் திரும்புவார்கள் என்பது இன்னொரு பெரிய கேள்விக் குறியாகும்.

இதன் காரணமாக கெந்திங் நிறுவனத்தின் உல்லாசக் கப்பல் வணிகமும் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றது.