Home One Line P1 அமைச்சர் பதவி விலகக் கோரி இணைய மனுவில் மக்கள் கையெழுத்திட்டு வருகின்றனர்

அமைச்சர் பதவி விலகக் கோரி இணைய மனுவில் மக்கள் கையெழுத்திட்டு வருகின்றனர்

597
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அண்மையில் தனிமைப்படுத்தல் உத்தரவை மீறியதாகக் கூறப்படும் தோட்டத் தொழில் மூலப் பொருள் அமைச்சர் முகமட் கைருடின் அமான் ரசாலியை பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி இயங்கலையில் மனு ஒன்றில் இதுவரை 20,000 கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

பதவி விலகக் கோரி, இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட change.org மனுவில் மொத்தம் 18,606 பேர் கையெழுத்திட்டனர்.

அந்த மனுவில், துருக்கியில் இருந்து திரும்பிய 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலை மேற்கொள்ளாது, பாஸ் மத்தியக் குழு உறுப்பினரான கைருடின், மக்களவையில் தோன்றியதை கேள்விக்குட்படுத்தி உள்ளது.

#TamilSchoolmychoice

“ஆரம்பக்கட்ட பரிசோதனையில் அவர் தொற்றுக் கண்டிராதது உறுதிசெய்யப்பட்டாலும், பிற குடிமக்களும் அதே தனிமைப்படுத்தப்பட்ட காலகட்டத்தை எதிர்கொள்ள வேண்டும். அவர் யார் என்பது முக்கியமல்ல.

“ஆகையால், மலேசியர்கள் அவர் பதவி விலக வேண்டும் என்றும், பிறருக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்துகிறார் ” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தை ஆரம்பத்தில் செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரெசா கோக் ஆகஸ்ட் 18 அன்று மக்களவையில் எழுப்பினார். ஜூலை 3 முதல் 7 வரை கைருடின் துருக்கிக்கு சென்றதாக ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 13- ஆம் தேதி மக்களவையில் கைருடின் காணப்பட்டார். இது தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட காலமான 14 நாட்களுக்குள் குறைவானதாகும்.

இந்த சம்பவம் குறித்து சமூக ஊடக, இணைய வாசிகளும் கடந்த இரண்டு நாட்களாகப் பொங்கியெழுந்து அமைச்சரைக் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

அமைச்சருக்கு ஒரு நீதி, பொதுமக்களுக்கு ஒரு நீதியா? என்ற கேள்வி எங்கெங்கும் எழுப்பப்படுகின்றன.

இதே நிலை பொதுமக்களில் ஒருவர் எதிர்நோக்கியிருந்தால் அவருக்கு கட்டாயம் 14 நாட்கள் நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும். அதனை அவர் மீறியிருந்தால் கண்டிப்பாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருப்பார்.

ஆனால், அமைச்சர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து புதன்கிழமை (ஆகஸ்ட் 19) அமைச்சர் கைருடின் மீது காவல் துறையில் புகார் ஒன்று செய்யப்பட்டிருக்கிறது.

செபுத்தே தொகுதியின் ஜசெக இளைஞர் பகுதியினர் இந்தப் புகாரைச் செய்துள்ளனர்.

1988-ஆம் ஆண்டுக்கான தொற்று நோய்க்கான தடை மற்றும் கட்டுப்பாடு சட்டத்தின் அடிப்படையில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமைச்சர் மீறியிருக்கிறார் என அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் இதுபோன்ற விவகாரங்களில் இரட்டைப் போக்கைக் கொண்டிருக்கிறது என்றும் ஜசெக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.